ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : மீண்டும் களமிறங்குமா காங்கிரஸ்?

Published On:

| By christopher

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பெரியாரின் கொள்ளுப்பேரனான திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். ஆனால் அவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் காலமானது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அவரது தந்தையும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அவர் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். எனினும் அவரும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி காலமானார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.

இதனையடுத்து அங்கு மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக வேட்பாளர் களமிறக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்தது.

எனினும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்ததாக தகவல் வெளியானது.

காங்கிரஸ் போட்டியிடும் என்று நான் சொல்லவில்லை!

இதனை பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதில், ”காங்கிரஸ் போட்டியிடும் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. கலந்துபேசி முடிவெடுப்போம் என்று தான் தெரிவித்துள்ளேன். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமையுடனும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடனும் ஆலோசனை நடத்தி சேர்ந்து முடிவெடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி வெளியானது!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share