வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும் என்ற செல்வப் பெருந்தகை அறிக்கையும், அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுவார் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
இவற்றைப் பார்த்துக் கொண்டு வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். அன்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆலோசனையை தொடங்கிய திமுக என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இளங்கோவன் மறைவு என்பது காங்கிரஸ் கட்சிக்கும் திமுக கூட்டணிக்கும் பேரிழப்பு தான் என்ற போதிலும்… அரசியல் ரீதியாக அடுத்த கட்டம் என்ன என்ற சிந்தனையும் விவாதமும் திமுகவில் அன்றே தொடங்கிவிட்டன.

இன்னும் சொல்லப்போனால் இந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நேரடியாக திமுகவே போட்டியிட வேண்டும் என ஈரோட்டில் இருந்து கோரிக்கை குரல்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தொடர்ந்து வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமான எட்டு நாட்கள் கழித்து டிசம்பர் 22-ஆம் தேதி திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் சமீப கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு 30-க்கும் மேற்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பேசினார்கள். அவர்கள் அனைவரது பேச்சையும் அங்கிருந்தபடியே கேட்டு உள்வாங்கிக் கொண்டு கூட்டம் முடிந்ததும் தலைமை செயற்குழு உறுப்பினர்களோடு உணவருந்தி விட்டு தான் முதலமைச்சர் புறப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் குத்தாலம் கல்யாணம் பேசும் போது, ‘கூட்டணி கட்சிகளை நாம் தட்டி வைக்கணும். வேட்பாளரே இல்லாத தொகுதிகளை எல்லாம் நம்மிடம் கேட்டு பெற்றுவிட்டு தொகுதி அறிவித்த பிறகு வேட்பாளரை தேட ஆரம்பிக்கிறாங்க.
இதுக்கு என்னுடைய மயிலாடுதுறை தொகுதியே உதாரணம். அதனால இனிமேல் வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் நாம் ரொம்ப கறாராக இருக்க வேண்டும். அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை சொன்னால் அந்த தொகுதிக்கு உட்பட்ட அவர்களது பலம் வாய்ந்த கட்சிக்காரர்கள் யார் யார் என்று ஒரு பட்டியலை நாமே அவர்களிடம் கேட்டு வாங்க வேண்டும். இல்லையென்றால் அந்த சீட்டை அவர்களுக்கு அளிக்கக் கூடாது. அப்படி அளித்தால் நமது எதிரிகள் அங்கே வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகும்’ என்று பேசினார்.

குத்தாலம் கல்யாணம் நீண்ட கால திமுககாரர். கலைஞர் காலத்திலேயே கலைஞரின் மனதில் என்ன உள்ளதோ அதை பொதுக்குழு உள்ளிட்ட கட்சியின் நிர்வாக கூட்டங்களில் போட்டு உடைப்பார் குத்தாலம் கல்யாணம். அதேபோல இப்போதும் ஸ்டாலின் மனக்குறிப்பில் இருந்துதான் அவர் பேசியிருக்கிறாரோ என்ற விவாதமும் அப்போதே எழுந்தது இதுகுறித்து டிசம்பர் 22 டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளருமான சந்திரகுமார் இல்ல திருமண விழாவிற்கு சென்றார்.

முதலமைச்சரோடு உதயநிதி ஸ்டாலினும் இந்த விழாவிலே கலந்து கொண்டார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் சென்னைக்கு வெளியே ஈரோட்டில் நடக்கக்கூடிய திருமண விழாவுக்கு வந்து வாழ்த்தியது அப்போதே திமுகவினர் மத்தியில் விவாதம் ஆகியது.
திருமண விழாவில் தான் தேர்தலுக்கான நிச்சயம் கூட செய்யப்பட்டது என்று கூட ஒரு பேச்சு இருந்தது.
இவ்வளவு சாதகங்கள் இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார். கூட்டணியில் நெருடல் ஏற்படுவதை அவர் விரும்ப மாட்டார் என்ற கருத்தும் ஒரு பக்கம் அறிவாலயத்தில் பேசப்பட்டது.
இதே நேரம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் திமுக தான் இருக்க வேண்டும். சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் நாம் கூட்டணி கட்சிக்கு கொடுப்பதை விட திமுகவே நின்றால் நமது கட்சி நிர்வாகிகள் மிக தீவிரமாக வேலை செய்வார்கள்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு கொடுப்பதை காங்கிரஸ் கட்சியிலேயே சில நிர்வாகிகள் ஏற்கவில்லை. திமுகவே போட்டியிடும் பட்சத்தில் மிக பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற முடியும்.

இதை கடந்த நான்காண்டு கால ஆட்சியின் நற்சான்றாக நாம் மக்களிடம் பெருமையோடு எடுத்துச் சொல்ல முடியும். ஒரு கூட்டணி கட்சி வெற்றி பெற்றால் அதை திமுக கிளைம் செய்து கொள்வது சரியாக இருக்காது. எனவே திமுகவே நேரடியாக களத்தில் இறங்கி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாக வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சரிடம் வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் தான் ஓரிரு நாட்களுக்கு முன்பு டெல்லி தலைமையிடமும் இந்த விஷயத்தை தெரியப்படுத்தி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையிடமும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சரியாக ஜனவரி 10ஆம் தேதி இரவு செல்வப் பெருந்தகையே திமுக ஈரோடு களத்தில் போட்டியிடுகிறது என்று அறிவிக்க ஜனவரி 11-ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும் கொங்கு வட்டாரத்தில் முதலியார்களின் அடையாளமாகவும் கருதப்படும் திருப்பூர் குமரனின் நினைவு தினத்தில் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின்.
இதே நேரம் காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகள் திமுகவின் பிற கூட்டணி கட்சிகளிடையே இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி கட்சிகளிடம் சீட்டு பேரத்தை இந்த இடைத்தேர்தல் மூலம் தொடங்கிவிட்டது திமுக. 2021 சட்டமன்ற தேர்தலில் 25 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள்தான். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதே இடங்கள் அளிக்கப்படலாம் அல்லது குறைக்கப்பட கூட செய்யலாம் என்ற ஒரு மெசேஜ் தான் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் செயல்பாடுகள் மூலம் திமுக சைலன்டாக உணர்த்தியிருக்கிறது என்ற விவாதங்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கூட்டணி கட்சிகளுக்குள்ளும் நடந்து வருகின்றன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கம் பேக் இந்தியன் தாத்தா… அப்டேட் குமாரு
மத்திய அமைச்சர் சொன்ன பொய்… அமைச்சர் சிவசங்கர் காட்டும் ஆதாரம்!