ஈரோடு கிழக்கு: இரவில் தொடங்கியது பணப்பட்டுவாடா!

Published On:

| By Jegadeesh

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அதிமுக மற்றும் திமுக இன்று இரவு முதல் பணப்பட்டுவாடா செய்துவருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 408 வாக்காளர்களில் இரண்டு லட்சம் வாக்காளர்களுக்கு ’விட்டமின் ப’ கொடுக்க திமுக தலைமை முடிவு செய்திருந்தது ஆனாலும் எவ்வளவு கொடுப்பது, அதிமுக எவ்வளவு கொடுக்கப் போகிறது என்பதை கடந்த மூன்று நாட்களாக திமுகவினர் மோப்பம் பிடித்து வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்தில் உறுதியாக வாக்களிக்கக்கூடிய நபர்களை மட்டும் கணக்கெடுத்து 1லட்சத்து 15 ஆயிரம் வாக்காளர்களுக்கு தலா இரண்டாயிரம் கொடுக்க முடிவுசெய்தார்.

நேற்று (பிப்ரவரி 20) ஆம் தேதி இரவு பதிவு எண் 9இல் முடியக்கூடிய டெம்போ ட்ராவலர் வேனில் கட்சி நிதி 25 கோடியை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அனுப்பி வைத்ததை, மோப்பம் பிடித்த போலீஸார் நேற்று இரவு முதல் இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி காலை வரையில் சல்லடை போட்டுத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

டெம்போவில் வந்த பணத்தை பாதுகாப்பாக பெற்றுக்கொண்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள், இன்று மாலை 7.00 மணி முதல் ஓட்டுக்கு இரண்டாயிரம் என விநியோகம் செய்துவிட்டனர், கடைசி நாள் அன்று அந்தந்த பூத் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் மாவட்ட செயலாளர்களை கூடுதலாக ஆயிரம் கொடுக்க சொல்லியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த தகவல், ஈரோட்டில் இன்று இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சரும் முதல்வர் மகனுமான உதயநிதிக்கு தெரிந்ததும், அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஆலோசனை செய்துள்ளார்.

தற்போது திமுக தலைமை இரண்டு லட்சம் வாக்காளர்களுக்கு முதல் கட்டமாக மூவாயிரமும், இரண்டாவது கட்டமாக ஆயிரம் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.

கூடுதலாக தொகுதியில் உள்ள சுமார் 70 ஆயிரம் குடும்பங்களில் 60 ஆயிரம் குடும்பத்தினருக்கு குடும்ப தலைவருக்கு ஒரு பரிசும், குடும்ப தலைவிக்கு ஒரு பரிசு கொடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள் திமுக பூத் பொறுப்பாளர்கள்.

வணங்காமுடி

இடைத்தேர்தலை ரத்து செய்க: தேர்தல் ஆணையரிடம் தேமுதிக மனு!

மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் உதயநிதி பரப்புரை !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share