உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை .. சசிகலா ஓபிஎஸ் -க்கு இடமில்லை – எடப்பாடி பழனிசாமி அதிரடி

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

மத்திய அரசு அறிவித்த UPS வடிவிலேயே திராவிட முன்னேற்றக் கழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திமுக பெயரை மட்டும் மாற்றியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சசிகலா ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவில் இணைக்கும் பேச்சிற்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 8) காலை டெல்லியில் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர் கூறுகையில் “நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ள நிலையில் மற்றும் பல கட்சிகள் இணைய உள்ளன. எங்களது கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி எங்களது கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின் அண்மையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அரசு ஊழியர்களை ஏமாற்றக்கூடிய ஒரு நாடகமாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இருந்த ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு இல்லை; அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

ADVERTISEMENT

2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதை வலியுறுத்தித்தான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது திராவிட முன்னேற்றக் கழக அரசு ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

புதிதாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசு ஊழியர்கள் இன்றைய தினம் ஏமாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசு அறிவித்த UPS வடிவிலேயே திராவிட முன்னேற்றக் கழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திமுக பெயரை மட்டும் மாற்றி வைத்துள்ளது

ADVERTISEMENT

தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது என்பதை சுட்டி காட்டினார்.

அதே சமயம் திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டினார்.

மேலும் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஓ.பன்னீர் செல்வத்தையும் அதிமுகவில் இணைக்கும் பேச்சிற்கே இடமில்லை. சசிகலா ஓபிஎஸ் இருவரும் இல்லாமலேயே அதிமுக வலுவாக உள்ளது”என்று தெரிவித்தார்.

மேலும் “அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும். தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்பதில் மாற்றமில்லை.” என்றார்.

வேறு எந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இப்போது பதிலளிக்க முடியாது. பேச்சுவார்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்படும் போது முறையாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share