தமிழகத்துக்கு வரவேண்டிய 2 லட்சம் கோடி தொழில் முதலீட்டை திமுக அரசு உதாசீனப்படுத்தியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 30) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் கமிஷன், எதிலும் கமிஷன் என்ற ஆக்டோபஸ் குணத்தால் தொழில் முதலீட்டாளர்களை திமுக அரசு விரட்டி அடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தது. ஆனால் திமுக அரசின் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசையால் இந்த முதலீட்டை விரட்டி அடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வேதாந்தா நிறுவனம் 1976 முதல் இந்தியாவில் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது. இந்நிலையில், வாகனங்களுக்குத் தேவையான “செமிகண்டக்டர்” எனும் இயந்திர சாதன உற்பத்தி ஆலையை துவக்க வேதாந்தா நிறுவனமும், பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்தது. ஆனால் இந்த ஆட்சியாளர்கள் விதித்த “கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்” நிபந்தனைகளால் இந்த தொழிற்சாலை மும்பைக்கு சென்று விட்டது.
இதன் மூலம் மாகாராஷ்டிராவில் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்க உள்ளது இதன் மூலம் மொத்த வருவாயாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இந்த முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய், ஆட்சியாளர்களின் அகோர பசியால் கைநழுவி போனதன் விளைவாக தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி… மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு தாங்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
வேதாந்தா நிறுவனம்தான் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பலத்த சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்ட்லைட் ஆலையை நிர்வகித்து வந்தது குறிப்பிடத் தக்கது.
மோனிஷா
