வைஃபை ஆன் செய்ததும், ‘என்னமோ நடக்குது.. எல்லாமே மர்மமா இருக்கு’ என ராகம் பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். EPS–Sudhish Meeting Fuels Buzz
தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான 4 வேட்பாளர்களை திமுக அறிவித்துவிட்டது. ஆனால் அதிமுக இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் யாராக இருக்கக் கூடும் என ஆளுக்கு ஒரு லிஸ்ட்டை வாசித்துக் கொன்டிருக்க, மாவட்ட செயலாளர்கள், மூத்த தலைவர்களுடன் சீரியசாக ஆலோசனை நடத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில், ‘எங்களுக்கு ஒரு சீட் கொடுத்தே ஆகனும்.. ஒப்புக் கொண்டதை செய்யுறதுதான் அதிமுகவின் கடமை’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஏகத்துக்கும் நெருக்கடி தரும் வகையில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் திடீரென தம்பி சுதீஷை எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தார் பிரேமலதா. சென்னையில் நேற்றிரவு நடந்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதிதான் என ஒரு தகவலும், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர மறுத்துவிட்டது அதிமுக என மற்றொரு தகவலும் ரெக்கை கட்டி பறந்தன.
இதற்கு ஏற்ப சென்னையில் இன்று செய்தியாளர்கள் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் சொல்லவும் இல்லை. இதனால் ஆமாவா? இல்லையா? என மாறி மாறி தகவல்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
இது பற்றி நாம் விசாரித்த போது, எடப்பாடி பழனிசாமி- சுதீஷ் இடையேயான உரையாடல் விவரங்களை அப்படியே ஒப்புவித்தன நம்ம சோர்ஸ்கள்.
சுதீஷ்தான் ஆரம்பித்திருக்கிறார்.. ‘ ‘நீங்கதானே மக்களவைத் தேர்தலின் போதே எங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி இடம் தருவோம் என வாக்குறுதி தந்தீங்க.. அதனால் எங்களுக்கு ஒரு சீட் கொடுக்கனும்’ என்றாராம்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘உண்மைதான்.. தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவோம் என சொன்னேன்..’ என சொல்ல சுதீஷ் முகம் மலர்ந்ததாம்.
ஆனால் எடப்பாடியோ, ‘மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் 5, 10 சீட் ஜெயிச்சிருந்தா இப்ப நீங்க கேட்கிற மாதிரி மாநிலங்களவை சீட் கொடுக்கலாம்..அப்ப எங்களுக்கு பிரச்சனையே வந்திருக்காது.. ஆனால் அதிமுக ஒரு இடம் கூட ஜெயிக்கலை.. மக்களவையில் எங்களுக்கு எம்பிக்களே இல்லை.. ராஜ்யசபாவில்தான் சான்ஸ் இருக்கிறது. அதை எப்படி நாங்க உங்களுக்கு விட்டுத் தர முடியும்? அதனால் வெயிட் பண்ணுங்க.. அடுத்த முறை மாநிலங்களவை சீட் தருகிறோம் என நிதானமாகவே சொன்னாராம்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சுதீஷ், ‘எப்படியாவது எங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுத்துவிடுங்க’ என மீண்டும் ‘உடும்பு பிடி’ அழுத்தமாக சொல்லிவிட்டு கிளம்பினாராம் என டைப் செய்தபடியே Sent பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.