ADVERTISEMENT

”தலைமையின் அனுமதியின்றி பேசாதீங்க” : கட்சியினருக்கு கடிவாளம் போட்ட எடப்பாடி

Published On:

| By christopher

”தலைமையின் அனுமதியின்றி பேசாதீங்க” : கட்சியினருக்கு கடிவாளம் போட்ட எடப்பாடி

அதிமுகவின் நிலைப்பாடுகள் குறித்து எந்த கருத்துகளையும், கட்சித் தலைமையின் அனுமதியின்றி தொலைக்காட்சி, பத்திரிகை, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடு விதித்துள்ளார். eps strict order to admk cadres on bjp alliance

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இரு கட்சியினர் மத்தியிலும் காரச் சார விவாதங்கள் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து சென்றார். ஆனால் நேற்று பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ’பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி இல்லை’ என உறுதியாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான தம்பிதுரை, “1952 முதல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை என்று கூறி, தற்போதும் 2026ல் எடப்பாடி பழனிசாமி தனித்தேதான் ஆட்சி அமைப்பாரே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது” என பேசினார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்!
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும். ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share