“மரபை மீறிவிட்டார் முதல்வர்”: எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு!

Published On:

| By Selvam

ஆளுநரை அமரவைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 9) காலை 10 மணிக்கு துவங்கியது. ஆளுநர் உரை முடிந்தவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரை என்பது ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களையும் கொள்கைகளையும் சட்டப்பேரவையில் சம்பிரதாயமாக அறிவிக்கும் உரை.

ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில் புதிய, பெரிய திட்டங்கள் இடம் பெறவில்லை. இந்த அரசும் முதலமைச்சரும் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொள்கிறார்கள் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் சற்று வித்தியாசமாக தமிழக ஆளுநர் உரையின் மூலம் தங்கள் முதுகை தட்டி சபாஷ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு இந்த ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆளுநர் உரை வெற்று உரையாக உள்ளது.

அரசு சார்பில் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு ஆளுநர் அனுமதிக்கு அனுப்பப்படும். அதில் எது இடம்பெற்றிருக்கிறது. எது இடம்பெறவில்லை என்று எங்களுக்கு தெரியாது.

நாங்கள் ஆளுநர் உரையை தான் கேட்க வந்திருக்கிறோம். முதலமைச்சர் உரையை கேட்க வரவில்லை. ஆளுநரை அமரவைத்துக்கொண்டு ஒரு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. போதை பொருட்கள் தமிழகத்தில் தங்கு தடையின்றி கிடைக்கிறது.” என்றார்.

செல்வம்

சட்டமன்ற கூட்டத்தொடர்: அருகருகே அமர்ந்த இபிஎஸ் ஓபிஎஸ்

துணிவு- வாரிசு ரசிகர்களுக்கு இடையே நடந்த பேனர் போட்டி! எங்கே தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share