அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். eps reply to election commission
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றாலும் அக்கட்சியில் நிலவும் குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், “அதிமுக விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த சூர்யமூர்த்தி அதிமுகவின் உறுப்பினர் கிடையாது. கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி வழக்கு தொடர முடியும்? அதிமுக பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது” என்று வலியுறுத்தி இருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை அண்மையில் நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “சூரியமூர்த்தி என்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல. தேர்தலில் வேறு கட்சி சார்பில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்டவர். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடரவோ அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. பொதுக் குழு, பொதுச் செயலாளர் தேர்வு உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் தொடர்பாக அவர் எந்த கேள்வியையும் எழுப்ப முடியாது.
சூரியமூர்த்தி போன்ற கட்சிக்கு விரோதமானவர்கள் புறவாசல் வழியாக தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது. உட்கட்சி பிரச்னை இருந்தால் சிவில் நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும். தவிர உட்கட்சி விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லாத தேர்தல் ஆணையத்திடம் முறையிட முடியாது.
உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் விசாரணை வரம்புகளுக்குள் வராது. ஆகவே, சூரியமூர்த்தி மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.