பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்த நிலையில், இன்று (ஜனவரி 22) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்தளித்தார்.
இதைத்தொடர்ந்து பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. நாளை நடைபெற உள்ள கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும். சுமார் 5 லட்சம் பேர் அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தொடக்கம் எங்களது கூட்டணியில் வெற்றிக்கு அச்சாணியாக அமையும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. சிறுமிகளுக்கும், பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த அரசாங்கம் எல்லா துறைகளிலும் தோல்வியைச் சந்தித்து விட்டது. எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்து இருக்கிறது. சுமார் 4 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்கள் பல துறைகளில் நடைபெற்றிருக்கின்றன என ஆளுநரிடம் அறிக்கை வழங்கியுள்ளோம்.அது மட்டுமல்ல, எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி.
பிரதமர் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது மட்டுமல்ல, ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்தியா எதிர்காலத்தில் வல்லரசு நாடாக உருவாகுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
தேர்தலில் அதிமுக – என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மத்தியில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஆட்சி தொடரும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நிலவும். அப்போது தமிழகம் மிகப் பெரிய ஏற்றத்தையும், மிகப்பெரிய வளர்ச்சியையும் பெறும். இதனால் வரலாற்றில் இல்லாத ஒரு வளர்ச்சியை இந்தத் தேர்தல் மூலமாக வெற்றி பெற்று மக்களுக்கு வழங்குவோம் என்று தெரிவித்தார்.
அப்போது, தேர்தலில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிசாமியும். பியூஷ் கோயலும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
