“2026ல் ஆட்சி அமைத்திடுவோம்” : ஜெ நினைவிடத்தில் ஈபிஎஸ் உறுதி ஏற்பு – ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மரியாதை!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசியலில் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் இன்று காலை அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.

ADVERTISEMENT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எனப் பலரும் கருப்பு சட்டை அணிந்து துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். மரியாதை செலுத்திய பிறகு, ஜெயலலிதாவின் லட்சியங்களைப் போற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

 “2026ல் நடைபெற உள்ள, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வகுத்த பாதையில், அம்மா கொள்கை வழியில் நின்று இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம்” என்று உறுதிமொழி ஏற்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

அவரைத்தொடர்ந்து சசிகலா மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share