டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலை… பன்னீர் நிலை… பாஜக கூட்டணி… எடப்பாடியின் ஸ்ட்ராங் மெசேஜ்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய  3 பக்க கடிதம் இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் படித்து முடித்துவிட்டு வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் அதிமுகவினரால்  பிப்ரவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கடிதத்தின் கடைசிப் பகுதி!

இதை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 23) அக்கட்சித் தொண்டர்களுக்கு  விரிவான மடல் ஒன்றை எழுதியுள்ளார். EPS Letter to ADMK cadres

ADVERTISEMENT

இந்த மடலின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ள பத்திகள்தான் அதிமுகவின் உட்கட்சி அரசியலை மீண்டும்  பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

’இன்றைக்கு நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும் பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தை காட்டிக் கொடுக்க தயாராகி இருந்த திரை மறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும் கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. EPS Letter to ADMK cadres

ADVERTISEMENT

ஓநாயும் வெள்ளாடும்  ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களையும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதாவது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்கள்  கோரிக்கை வைத்த நிலையில் தான், இப்படி அழுத்தம் திருத்தமாக ஒரு கருத்தை அதிமுக தொண்டர்களின் குரலாகவே கடிதத்தில் வெளிப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடியின் குடுமி பாஜக கையிலா?

admk edappadi criticize ops and ttv

சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் குடுமி தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜகவின் கைக்கு சென்று விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.

அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், ’தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்’ என்று கூறினார். அதுமட்டுமல்ல… 2021 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவை ஒருங்கிணைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முயற்சிகளை பட்டியல் போட்ட பன்னீர்செல்வம், அதையெல்லாம் கெடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகவின் கையில் இருக்கும் நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள்ளாக, எடப்பாடி பழனிசாமியை பாஜக கூட்டணிக்கு கொண்டு வருவது… இதற்கு அவர் மறுத்தால் அதிமுகவை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி பாஜக தலைமையில் அணி அமைப்பது என்பது தான் டெல்லி தலைமையின் திட்டம்.

அமித் ஷா வரும் நேரம்…

வருகிற சிவராத்திரி திருவிழாவை ஒட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை ஈஷா மையத்துக்கு வருகை தருகிறார். இந்த பயணத்தில் அவரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். EPS Letter to ADMK cadres

இந்த நிலையில்தான் மீண்டும் ஓபிஎஸ் அதிமுகவுக்குள் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை தனது கடிதம் மூலம் உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி.

அதிமுக வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது, ‘பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதுபோல பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றவர்களையும் மீண்டும் கட்சிக்குள்ளோ கூட்டணிக்குள்ளோ சேர்ப்பதில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

’பன்னீரை மீண்டும் சேர்த்தால் அவர் அதிமுகவை பாஜகவிடம் மறுபடியும் சென்று அடகு வைப்பார். இது மட்டுமல்ல 2021 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக கடுமையான சரிவை சந்தித்ததற்கு காரணம் ஓபிஎஸ் தான். திமுக தென் மாவட்டங்களில் ஸ்கோர் பண்ணுவதற்கு பன்னீர்செல்வம் தான் உதவினார் என்று அப்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமான அதிமுக புள்ளிகளிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் குழப்பங்கள் தான் அதிகமாகும். பாஜகவோடு கூட்டணி செல்ல வேண்டும் என்று பகிரங்கமாக கூறுவார். அதனால் கட்சியின் ஒருமித்த கருத்தில் குளறுபடிகள் ஏற்படும்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் பன்னீர் செல்வமோ, டிடிவியோ இல்லாமல் நம்மால் பலமான கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும்.

தனிமைப்பட்ட பாஜக

இரு மொழிக் கொள்கை விவகாரத்தில் பாஜக தமிழகத்தின் மீது கடுமையான வெறுப்பை காட்டுவதால்… திமுக அல்லது அதிமுக என்ற இரண்டு கட்சிகளுடன் தான் மற்ற கட்சிகள் கூட்டணி சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாஜக அரசியல் ரீதியாக தனிமைப்பட்டுள்ளது. EPS Letter to ADMK cadres

இந்த சூழ்நிலையில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம். பாஜக தேர்தல் ஆணையம் மூலமாக நம்மை அதைச்  செய்கிறோம் இதை செய்கிறோம் என்று மிரட்டத்தான் முடியும். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பன்னீர்செல்வத்துக்கு நாம் சொல்கிற இந்த பதில் பாஜகவுக்கும் சேர்த்துதான்’ என்று இந்த அறிக்கை தயார் செய்யும் போதே எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

பன்னீர் செல்வத்துக்கும் பாஜகவுக்கும் மட்டுமல்ல… பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் சில சீனியர்களுக்கும் சேர்த்து தான் இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அதிமுக தலைமை கழக வட்டாரத்தில். அதோடு பன்னீரைத்தான் எடப்பாடி கடுமையாக விமர்சித்திருக்கிறாரே தவிர, அவரோடு இருக்கும் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்த்துக் கொள்ள தயாராகிவிட்டார். விரைவில் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்கின்றனர். EPS Letter to ADMK cadres

பிப்ரவரி 24 இல் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு?

நாளை ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது அதிமுக. தலைமை கழகத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு மலரை வெளியிடுகிறார்.

அதன் பிறகு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அதிமுகவின் 2026 தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் தகவலையும் எடப்பாடி  வெளியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share