NDA முதல்வர் வேட்பாளர்? எடப்பாடி வீட்டு விருந்தில் பங்கேற்ற வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுக – பாஜக இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் களைகட்டியுள்ளன. அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், அன்புமணி தரப்பு பாமகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில், நாளை (ஜனவரி 23) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில், தமிழ்நாடு பாஜக தேர்தல் மேலிடப் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான பியூஷ் கோயல் முன்னிலையில், டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்த நிகழ்வின்போது எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறுகையில், ” பாஜகவின் மாநில தேர்தல் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இப்போது எதிர்க்கட்சி தலைவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. நாளை பிரதமர் மோடி சென்னை வருகின்றபோது அங்கு கூடுகின்ற கூட்டம் தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறும் கூட்டமாக இருக்கும். காலை உணவு முடிந்த பிறகு அமைச்சர் பியூஷ் கோயல் உங்களைச் சந்திப்பார்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share