தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் இனி போட்டி என்று விஜய் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. eps duraimurugan reply to tvk vijay
அதில் பங்கேற்று பேசிய விஜய், ”2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் இடையில்தான் போட்டி என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு, மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவை விஜய் போட்டியாகவே கருதவில்லையோ என்ற கேள்வியை எழுப்பியது.
இந்தநிலையில், அதிமுக மட்டுமின்றி ஆளும் திமுக, விசிக உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்யின் பேச்சுக்கு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
விஜய் அவரது கருத்தை தெரிவிக்கிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே, அவ்வாறு பேசியுள்ளார். எல்லா கட்சித் தலைவர்களும் அப்படிதான். நாங்கள் பிரதான எதிர்கட்சி என்று மக்கள் ஒப்புக்கொண்டு அதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
யார் யாருக்கு போட்டி என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் கட்சி நாங்கள் உழைப்போம், நாங்கள் ஜெயிப்போம்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
திமுக ஆட்சியில் விஜய் தனது படத்தை வெளியிட மிகவும் சிரமப்பட்டார், அவர் மனதில் பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் விஜயின் பதில். அவரின் படத்தை விநியோகம் செய்ய குறிப்பிட்ட நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும் என திமுக ஆட்சியில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் விஜயின் மனம் புண்பட்டு உள்ளது. செய்யும் தொழிலுக்கு இவ்வளவு இடையூறு கொடுக்கிறார்கள் என்று மனம் வெதும்பிய காரணத்தினால் விஜய் அப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவருடைய சிந்தனை அரசியல் வெளிபாடு அல்ல; நீண்ட காலமாக மனதில் இருக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி eps duraimurugan reply to tvk vijay
எல்லாரும் திமுகவைத்தான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை. முதலமைச்சருக்கு போட்டியாக எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி
திராவிட முன்னேற்றக்கழகம் என்பது 75 ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு ஆலமரம். யார் அரசியலுக்கு வந்தாலும் இந்த கட்சியை தொட்டுவிட்டுதான் செல்லவேண்டும். பலர் கட்சியை ஆரம்பித்தார்கள். இறுதியில் அவர்கள் திமுகவோடுதான் வந்து ஐக்கியமாகிவிட்டார்கள். ஆகையினால், யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை இல்லை.. இதுவெல்லாம் வெறும் பாஸிங் கிளவுட்ஸ். இதே போன்று கடந்த 75ஆண்டுகாலத்தில் நிறைய பார்த்துவிட்டோம்
விசிக சிந்தனைச் செல்வன்
கருதியல் ரீதியாக பாஜகவை தவெக விமர்சிக்கவில்லை. பாஜகவிற்கு வாக்குகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தவெக. திமுகவுக்கு ஆதரவான அமைப்புகளிடையே குழப்பத்தை உருவாக்க முயல்கிறது தவெக. நூற்றாண்டு கால அரசியல் பாரம்பரியம் உள்ள திமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதி இல்லை. தேர்தல் களத்தில் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை தவெக. அரசியல் முதிர்ச்சியே இல்லாத கட்சி தவெக.
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி
திமுகவிற்கு எந்த கட்சியும் போட்டியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஜனநாயகத்தை நிலைநிறுத்தவது முதல் நபர் தளபதியார்தான். இது மன்னராட்சி இல்லை.. மக்களாட்சி.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி.
திமுக அமைச்சர் சேகர்பாபு
அவர்கள் தவளுகின்ற குழந்தைகள். நாங்கள் பி.டி.உஷா போல் பல்வேறு ஓட்டப்பந்தங்களை கண்டு வெற்றி பெற்றவர்கள். பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; போராட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; ஆர்ப்பாட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்து அதை போட்டோ எடுத்து போட்டுக் கொண்டு அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருப்பது தான் தமிழகத்தின் நிலை.இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.