பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்தவுடன் மழை வந்து சூரியனை மறைத்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி பேசியதை சுட்டிக்காட்டி, “வாழ்க்கை முழுவதும் கால்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் சூரியன் எப்படித் தெரியும்?” என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், இன்று (ஜனவரி 29) சேலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என்னை 10 தோல்வி கண்ட பழனிசாமி என்று விமர்சித்துள்ளார். ஸ்டாலின் அவர்களே, கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உங்கள் தந்தையும் உயிரோடு இருந்தார், நீங்களும் இருந்தீர்கள். இரண்டு பேரும் இருந்தும் கூட எதிர்க்கட்சி வரிசையில் அமர முடியவில்லை.
2011 இல் இருந்து 2021 வரை பல தோல்விகளைக் கண்ட கட்சி திமுக. அது மட்டுமல்ல, நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதேபோல் உள்ளாட்சி, கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் எல்லாவற்றிலும் நாங்கள் வெற்றி பெற்றோம்.ஏதோ கால சூழ்நிலையின் காரணமாக நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை எல்லாம் அறிவித்து, கவர்ச்சிகரமாகப் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துவிட்டீர்கள்.
இன்று அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், விவசாயிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என அனைத்து அமைப்பினரும் தமிழகத்தில் போராடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகம் போராட்டக் களமாக மாறிவிட்டது. திமுக கொடுத்த வாக்குறுதியைக் கேட்டு இந்த அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
மேலும், “எப்போது பார்த்தாலும் பழனிசாமி காலையே பார்க்கிறார் என்று ஸ்டாலின் சொல்கிறார். காலைப் பார்த்தால் தான் சரியான பாதையில் நடக்க முடியும். உங்களைப் போல் கை டைப் அடிக்கவில்லை. பேச ஆரம்பித்தால் அசிங்கமாகப் போய்விடும். மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்; இல்லாவிட்டால் எங்களுக்கும் பேசத் தெரியும்.ஸ்டாலின், நாங்கள் வலிமையாக இருக்கிறோம். நான் வலிமையாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அவ்வப்போது சைக்கிள் ஓட்டி, பளு தூக்கிக் காட்டுகிறீர்கள். அதை யாரும் கேட்டார்களா? நீங்கள் எதற்கு காட்டுகிறீர்கள்? மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
திரு. ஸ்டாலின் அவர்களே, இனி அரசியலை அரசியல் ரீதியாகப் பேசுங்கள். எங்களுடைய ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். உங்களுடைய ஆட்சியில் ஏற்படக்கூடிய அவலங்கள், தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். அதற்கு சரியான பதில் கொடுக்கத் துப்பில்லாமல், திராணி இல்லாமல் ஏதேதோ பேசி மழுப்பி, எங்களை அவதூறு பிரச்சாரத்துக்கு ஆளாக்கினால், நிச்சயமாக உரிய பதிலடி கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாதாரணத் தொண்டன், விவசாயி இன்று ஒரு நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்றால் எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்களைப் போல் உங்கள் அப்பா முதலமைச்சராக இருந்தார், உங்கள் அப்பா திமுக தலைவராக இருந்தார். அதனால் நீங்கள் இந்த ஆட்சிக்கு வந்து, இந்தப் பதவிக்கு வந்துவிட்டீர்கள். சாதாரண ஒரு விவசாயி வர முடியுமா? எவ்வளவு கடினம் என்பதை அனுபவ ரீதியாக நான் அறிந்தவன்.
உங்களுக்கு அந்த அனுபவம் கிடையாது. அதனால்தான் இந்த ஆட்சி தலை குனிந்து போயிருக்கிறது.திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? ஒரே ஒரு பலன் கிடைத்தது என்றால், அது கடன்காரன் என்ற பலன் தான் கிடைத்துள்ளது. இன்று 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறீர்கள். அந்தக் கடனை யார் கட்டுவது? இங்கிருக்கும் ஏழை மக்கள் மீது வரி போட்டு தானே அந்தப் பணத்தை வசூல் செய்ய முடியும்” என்று காட்டமாக விமர்சித்தார்.
