சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? – எடப்பாடி பழனிசாமி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தவர் மின்சார ரயிலில் திருத்தணி நோக்கி சென்றுள்ளார். அப்போது 17 வயதிற்குட்பட்ட 4 சிறார்கள் சுராஜை கத்தியை காட்டி மிரட்டுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதை சுராஜ் தடுத்த நிலையில் சிறார்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

அவர்களிடம் இருந்து தப்பித்த சுராஜ் திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார். மீண்டும் அவரை விடாமல் துரத்திய சிறார்கள் மறைவான இடத்திற்கு சுராஜை அழைத்து சென்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதை 4 பேரில் ஒரு சிறுவன் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து 4 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (டிசம்பர் 29) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

ADVERTISEMENT

படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.

தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.

அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே?

மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் ஸ்டாலின் அவர்களே?

கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது.

புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது. சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது.

மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது. பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்! தமிழகம் மீட்கப்படும்!

அன்புமணி கண்டனம்

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்: போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் திமுக படுதோல்வி!

சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளி சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார தொடர்வண்டியில் பயணம் செய்திருக்கிறார். திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் அந்த தொடர்வண்டியில் ஏறிய 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் தங்களிடமிருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டுவது போல மிரட்டியுள்ளனர். அதை அவர்களில் ஒருவன் காணொலியில் பதிவு செய்திருக்கிறான். இதனால் அச்சமடைந்த சுராஜ், அவர்களை தடுத்து விட்டு, திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியுள்ளார்.

ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற சிறுவர்கள் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி அதை காணொலியாக பதிவு செய்து இணையத்தில் பரவ விட்டுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை அங்குள்ள மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்த செய்தியை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது; உடல் நடுங்குகிறது.

பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பொதுமக்கள் முன்னிலையில் தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையத்திலும் ஒருவரை அரிவாளால் வெட்டி படம் பிடித்து வெளியிடத் துணிகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கமும், அதனால் ஏற்படும் தாக்கமும் எந்த அளவுக்கு பெருகியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த சீரழிவுக்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது. இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதைத் தொடர்ந்து 28.07.2022-ஆம் நாள் போதைப் பொருள்களில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி எனது தலைமையில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டிற்கு ஆந்திராவிலிருந்து தான் அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்பதால் எல்லையோர மாவட்டங்களில் அதன் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் போது திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினேன்.

கடந்த வாரம் திருத்தணியில் நடைபெற்ற மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணியும் இதே கருத்தை வலியுறுத்தினார். அடுத்த வாரத்திலேயே அதே திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அட்டகாசம் செய்திருப்பதிலிருந்தே இந்த விஷயத்தில் திமுக அரசு எந்த அளவுக்கு செயலற்று கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது. அதனால் பொதுவெளிகளில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share