அதிமுக வெற்றி பெற்றால் பாஜக அமைச்சரவையில் பங்கு கேட்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்காதது தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜனவரி 9) காலை சந்தித்தார். சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது நயினார் நாகேந்திரனைச் சந்தித்துள்ளார்.
அதிமுகவுடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிட அதிகத் தொகுதிகளை பாஜக கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தைக் காரணம் காட்டி பாஜக அதிகத் தொகுதிகளை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஆலோசித்தோம். கூட்டம் சென்னையிலா அல்லது மதுரையிலா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பிரதமர் வரும் தேதி தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. இந்த மாத இறுதியில் வர வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்தார்.
பாஜக அமைச்சரவையில் பங்கு கேட்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டார்.
