வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியின் கார் நுழையும் ஃப்ளாஷ் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கி நடந்து கொண்டிருந்த வேளையில்… திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்ற தகவல் வெளியானது. EPS AMITH SHA MEETING FULL REPORT
சட்டமன்றத்தில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் பலருக்கும் கூட அப்போதுதான் இந்த தகவல் தெரியும். பலரும் சட்டமன்ற அதிமுக கொறடா வேலுமணியிடம், ‘ என்ன அண்ணே… திடீர்னு டெல்லி போறாரு?’ என்று விசாரிக்க ஆரம்பித்தனர்.
பார்ப்போம் பார்ப்போம் என்று பதில் சொல்லிக் கொண்டிருந்த வேலுமணியும், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமியுடன் சேர்ந்து மதியம் டெல்லிக்கு புறப்பட்டார்.
ஏற்கனவே டெல்லியில் அதிமுக மூத்த எம்பி தம்பிதுரை, சிவி சண்முகம் ஆகியோர் எடப்பாடியை வரவேற்றனர்.
டெல்லியில் சமீபத்தில் திறப்பு விழா கண்ட அதிமுக அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அதன் பிறகு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு இரவு எட்டு மணி அளவில் அமித் ஷாவின் இல்லத்துக்கு சென்றார்.
சுமார் 8.15 மணிக்கு தொடங்கிய சந்திப்பு இரவு 10 மணிக்கு மேல் நீடித்தது.

கடந்த 2023 செப்டம்பர் மாதம் இனி பாஜக வோடு கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதன்முதலாக அறிவித்தார். அதன்பிறகு அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் நிறுவனத் தலைவர்களை அவர்களது மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதால் இனியும் அந்த கூட்டணியில் இருக்க முடியாது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக தனியாகவே சந்தித்தது. அந்த தேர்தலுக்கு முன்பு பாஜகவின் கூட்டணி கதவுகள் அதிமுகவுக்காக திறந்தே இருக்கின்றன என்று அமித்ஷா பேட்டி கொடுத்தார். அதன் பிறகு கூட எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தென்சென்னை வேட்பாளரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழிசை, அதிமுக -பாஜக கூட்டணி அமைந்திருந்தால் சுமார் 35 தொகுதிகளை நாம் வென்றிருக்கலாம் என்று தன் கருத்தை வெளியிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியும் இதே போன்ற கருத்தையே வெளியிட்டார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது அதிமுக- பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்ற எண்ணம் இரு கட்சிகளிலும் உள்ள பல தலைவர்களுக்கும் ஏற்பட்டது.
ஆனால் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் இந்த விஷயத்தில் தொடர்ந்து முரண்பட்டே நின்றார்கள்.

இதற்கிடையில் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து… நாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதேபோல பாஜக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து பழைய தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதைத் திட்டவட்டமாக தெளிவாக மறுத்தார்.
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் இனி பாஜகவோடு கூட்டணியே கிடையாது என்று தொடர்ந்து கூறிவந்தார்.
இந்த அரசியல் சூழலில் வேலுமணி உள்ளிட்ட புள்ளிகளோடு பாஜகவின் டெல்லி பிரமுகர்கள் தொடர்ந்து டச்சில் இருந்தனர்.
இதற்கிடையில்தான் செங்கோட்டையன் அதிமுகவுக்குள் இருந்தபடியே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெடித்தார். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார். சாணக்யா youtube விழாவில் பிரதமர் மோடியின் ஆட்சியை புகழ்ந்தார்.
இதற்கிடையே பிப்ரவரி 27ஆம் தேதி ஈஷா சிவராத்திரி விழாவுக்காக கோவை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கேயே வேலுமணியை சந்தித்து பேசினார். அப்போது, ’2026 இல் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று வேலுமணியிடம் கேட்டார் அமித்ஷா. இந்த தகவல் எடப்பாடியிடமும் தெரிவிக்கப்பட்டது. EPS AMITH SHA MEETING FULL REPORT
அதற்குப் பிறகுதான், எடப்பாடி பழனிசாமி ’திமுக தான் எங்கள் ஒரே எதிரி. அவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவோம்’ என்று அறிவித்தார். அதே நேரம் சசிகலா- ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி.
ஒரு கட்டத்தில், ‘நாங்கள் எவ்வளவோ சொல்லியும் எடப்பாடி பழனிசாமி கேட்பதாக இல்லை. தேர்தல் நெருக்கத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கருதுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. திமுக கூட்டணி 2017 ஆம் ஆண்டிலிருந்து வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறது. பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் அதை தாண்டிய ஒற்றுமையோடு இருக்கிறார்கள்.
இந்நிலையில் எதிர் தரப்பில் நாம் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணியை உறுதிப்படுத்தினால்தான்… கட்சியின் தொண்டர்களை தேர்தலுக்காக சரி செய்ய முடியும். கசப்பு வார்த்தைகளை பேசிவிட்டு தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி என்றால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக தான் அமையும். அதுவரை காத்திருக்காமல் உடனடியாக அழைத்து அவரிடம் பேசுங்கள்’ என்று வேலுமணி தன்னிடம் பேசிய டெல்லி புள்ளிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த மெசேஜ் அமித்ஷாவின் கவனத்துக்கு சென்று அதன் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக அழைத்திருக்கிறார் அமித்ஷா.
மேலும் பாஜக உட்கட்சி தேர்தல்கள் நடந்து முடிந்து மாதங்கள் ஆனாலும் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் பதவி இன்னமும் மாற்றப்படவில்லை. அதாவது அண்ணாமலையே மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் அல்லது அவருக்கு பதிலாக இன்னொருவர் நியமிக்கப்பட வேண்டும். கேரளாவில் நேற்று மார்ச் 24ஆம் தேதி பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பாஜக மாநில தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்ற பேச்சு ஜனவரி மாதத்தில் இருந்து எழுந்துள்ளது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில்… இன்று அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய சந்திப்பால் தமிழகத்தில் பாஜக மாநில தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதை வலுப்படுத்துவது போல, இன்று மாலை சென்னை எழும்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்தார் விருந்து நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்தியாவில் யார் வேண்டுமானாலும் சென்று சந்திக்கலாம். இதில் அரசியல் முடிச்சு ஏதும் இல்லை. இப்போது இதுபற்றி நான் ஏதும் சொன்னால் அது தவறாக போய்விடும்’ என்று கூறினார்.
அதாவது எடப்பாடி என்ன அமித் ஷாவை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று சொன்னதன் மூலம் தனது அதிருப்தியையே அண்ணாமலை வெளிக்காட்டியதாக கூறுகிறார்கள். இதற்கிடையே எடப்பாடியின் டெல்லி விசிட்டையடுத்துதான், பாஜகவின் இப்தார் விருந்தில் டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்ள முடிவெடுத்து வழக்கறிஞர் பாலுவை அனுப்பியிருக்கிறார். எடப்பாடி என்.டி.ஏ.வுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் அவர் இன்று காலை இம்முடிவை எடுத்தார் என்கிறார்கள்.
இதில் அரசியல் முடிச்சு இல்லை என்று அண்ணாமலை சொன்னாலும்… எடப்பாடியுடனான சுமார் 2 மணி நேர சந்திப்புக்கு பிறகு அமித்ஷா தனது சமூக தளத்தில் இன்று தான் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை தமிழ் குறிப்புகளோடு வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று அமித்ஷா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே எடப்பாடி உடனான சந்திப்பு முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பானதுதான் என்பது தான் டெல்லி வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் லேட்டஸ்ட் தகவல்”என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.