”அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்” – மீண்டும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

Published On:

| By christopher

eps again strong message to amitshah

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். eps again strong message to amitshah

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 14) தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “அதிமுக கூட்டணி ஒற்றுமையாக வலுவாக இருக்கின்றது. வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மக்களின் எழுச்சியை பார்க்கும்போது திமுக அகற்றப்படுவதற்குக் காரணம் தெளிவாகத் தெரிகிறது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. சட்டம் ஒழுங்கு சீர் கேட்டுவிட்டது அனைத்து துறையிலும் ஊழல் இருக்கிறது. என்று மக்கள் கொந்தளிப்புடன் இருப்பது சுற்றுப்பயணத்தின் போது தெரிகிறது” என்றார்.

ADVERTISEMENT

தந்திரமாக மக்களை ஏமாற்றுகின்றனர்!

மேலும் அவர், “உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வேடிக்கையாக இருக்கிறது. நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யவில்லை. விளம்பரத்தாள்களில் நிறைய செய்ததாக வெளியிடுகிறார்கள். நான்கரை ஆண்டு காலம் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தேர்தலை ஒட்டி விளம்பரத்தால் என்னவெல்லாம் செயல்படுத்தினோம். குறைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக வீடு வீடாகச் சென்று செல்போன் எண்களை வாங்கி திமுக ஐடி அணியிடம் தருகின்றனர். அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தினால் தான் செல்போன் எண்களை கொடுப்பார்கள், மற்றவர்கள் கேட்டால் மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்பதால் தந்திரமாக மக்களை ஏமாற்றி செல்போன் எண்களை வாங்குகின்றனர்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அவர், “அதிமுகவுடன் தேர்தல் நேரத்தில் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும். பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு செய்யாமல் உள்ளன. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் நிறைய கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன.

ADVERTISEMENT

கனிமக் கொள்ளைகள் குறித்து அதிமுக சட்டமன்றத்தில் பேசி உள்ளது. தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. அரசு அதில் கவனம் செலுத்தவில்லை. அரசு பகிரங்கமாகக் கொள்ளையடிப்பதை செய்து வருகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் எந்தெந்த துறையில் ஊழல் நடந்துள்ளது என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கடந்த வாரம் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அமித்ஷா அளித்த நேர்காணலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் ‘அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share