இனிமேல் இந்த விஷயத்துக்கு ஆதார் கார்டை பயன்படுத்த முடியாது என திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஆதார் கார்டானது வங்கிக்கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு என பல்வேறு விஷயங்களுக்கு முக்கியமான ஆதாரமாக பயன்படுகிறது. அதோடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஆதார் முக்கியமான ஆவணமாக தேவைப்படுகிறது. இதனால் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருமே ஆதார் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது.
இதற்கிடையில் பிறப்பு சான்றாக ஏற்று கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு(EPFO) இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) உத்தரவிட்டது.

ஆதார் சட்டம் 2016-ன் கீழ், தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும் போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பிறந்த தேதி புதுப்பித்தல் மற்றும் இணைப்பிற்கு ஆதார் கார்டு ஏற்றுக்கொள்ளப்படாது என EPFO அறிவித்துள்ளது. மேலும் ஒருவர் பிறந்த தேதி சான்றிதழாக ஆதாரை பயன்படுத்தினால் அவருடைய ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக பாஸ்போர்ட், பான் கார்டு, SSC சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பள்ளி விடுப்புச் சான்றிதழ், பரிமாற்றச் சான்றிதழ், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் சேவைப் பதிவின் அடிப்படையிலான சான்றிதழ் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்று EPFO தெரிவித்து இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
