‘மிஸ் யூ பவானி’ -விபத்து அன்று என்ன நடந்தது?: யாஷிகா

entertainment

நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். யாஷிகாவுக்கு இடுப்பு, கால் பகுதிகளில் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த பவானி என்பவர் மரணமடைந்தார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டார் யாஷிகா. விபத்துக்குப் பிறகு வெளியிட்டுள்ள அந்த பதிவில்,

“என் தற்போதைய நிலையை நான் விவரிக்கவே முடியாது. எனக்கு இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவுகள் மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓய்வெடுத்து வருகிறேன். எழுந்து நிற்கவோ… நடக்கவோ இன்னும் குறைந்தது 5 மாதங்கள் ஆகும். தற்போது நாள் முழுவதும் பெட் ரிட்டர்னாக உள்ளேன். இயற்கை உபாதைகளைக்கூடப் பெட்டில்தான் கழிக்கிறேன்.

என்னால், இடது அல்லது வலது பக்கம் திரும்ப முடியாது. பல நாட்கள் இப்படியேதான் இருக்க வேண்டும். என்னுடைய பின் பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக என் முகத்தில் எதுவும் காயம் ஏற்படவில்லை. இது நிச்சயமாக எனக்கு மறு பிறப்பு என்றே உணர்கிறேன். கடவுள் என்னைத் தண்டித்துள்ளார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடும்போது இது ஒன்றுமில்லை.

நான் இனி வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன்தான் வாழ்வேன். பயங்கர விபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்வதா…? இல்லை என் உயிர்த் தோழியை எடுத்துக் கொண்டதற்காகப் பழி சொல்வதா..? என்று எனக்குத் தெரியவில்லை.

நான் பவானியை மிஸ் பண்ணுகிறேன். நீ என்னை மன்னித்துவிடுவாய் என தெரியும். ரொம்ப சாரி. உன் குடும்பத்தாரை இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் விட்டுவிட்டேன். ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் பண்ணுகிறேன். உயிருடன் இருப்பதற்காக எனக்குள் குற்ற உணர்ச்சியாக உள்ளது.

உன் ஆத்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன். நீ மீண்டும் என்னிடம் வர பிரார்த்தனை செய்கிறேன். ஒரு நாள் உன் குடும்பத்தார் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக இருந்த நினைவுகளை என்றும் கொண்டாடுவேன்.

நான் இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடப் போவது இல்லை. அதனால் ரசிகர்கள் யாரும் என் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்.

எல்லா எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்து, அனைவரது பிரார்த்தனைகளுக்கும், நலன் விரும்பிகளுக்கும், அனைவரது அக்கறை மற்றும் அன்புக்கும் நன்றி…” என்று உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார் யாஷிகா.

மற்றொரு பதிவில், “சட்டம் எல்லோருக்கும் சமம்தான். நான் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை எனவும் இதை மருத்துவர்களது அறிக்கையும், போலீசாரும் உறுதி செய்தனர். குடித்துவிட்டு கார் ஓட்டியதாக சில ஊடகங்கள் வியூஸ் மற்றும் சப்ஸ்கிரைப்பர்களுக்காக தவறான செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார் யாஷிகா.

மருத்துவமனையிலிருந்த வீடு திரும்பிய யாஷிகா விபத்து குறித்து ‘தி இந்து’ ஆங்கில பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்று விளக்கியுள்ளார்.

“பவானி எனக்கு பெஸ்ட் பிரண்ட். மாடலிங் துறையிலிருந்த அவர் பின்னர் அமெரிக்கா சென்று இன்ஜினியராக பணியாற்றினார். ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய பெற்றோருடன் நேரத்தைச் செலவிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தார்.

பிறகு சென்னை வந்து என்னைச் சந்தித்தார். கடந்த 24 ஆம் தேதி நாங்கள் நான்கு பேர் ரிசார்ட்டில் டின்னர் முடித்துவிட்டு இரவு 11 மணி அளவில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் இந்த விபத்து நடைபெற்றது. டாடா ஹேரியர் காரை நான்தான் ஓட்டினேன். ஆனால் நிச்சயமாக வேகமாக ஓ ட்டவில்லை.

சாலை மிகவும் இருட்டாக இருந்தது. எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி மூன்று முறை கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. எனது அருகில் பவானி அமர்ந்திருந்தார். ஆனால் அவர் சீட் பெல்ட் அணிய வில்லை. ஜன்னலும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

கார் கவிழ்ந்ததில், ஜன்னல் வழியே தூக்கி வீசப்பட்டு விழுந்தார் பவானி. இதில் பவானிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூவரும் காருக்குள்ளேயே இருந்தோம். கார் கதவுகள் ஜாம் ஆகியதால், எங்களால் வெளியே வர முடியவில்லை. பின்னர் சன் ஃரூப் வழியாக வெளியே வந்தோம்.

சிறிது நேரத்தில் அங்கு அதிக அளவிலான கூட்டம் கூடியது. என்னால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். நான் குணமடைந்த பின்னரே என்னிடம் பவானி இறந்த செய்தியைத் தெரிவித்தார்கள்.

சம்பவத்தன்று நான் மது அருந்தவில்லை என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். சிறிய கவனச் சிதறலால் ஏற்பட்ட எதிர்பாராதவிதமான ஒரு விபத்து இது. இதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்கிறேன். குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன். இனி நான் எப்போதும் குற்ற உணர்ச்சியுடன் தான் வாழ வேண்டும். நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகப் போலி வீடியோக்கள் இணையதளங்களில் வலம் வருகிறது. விபத்து அன்று என்ன நடந்தது என்று விளக்கி ஒரு வீடியோவை வெளியிட விரும்புகிறேன். ஆனால் அது என்னால் முடியவில்லை என்று யாஷிகா உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

**-இராமானுஜம், பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *