ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் பூந்தமல்லியில் உள்ள ’இவிபி’யில் நடைபெற்று வந்தது. சண்டைக்காட்சிகள் தனித் தனியாக எடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஷூட்டிங்கின் போது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகனான கிருஷ்ணா (34), மற்றும் ஷங்கரின் உதவியாளர் மது (29), சந்திரன் (60) ஆகியோர் இந்த கோர விபத்தில் பலியாகினர். படப்பிடிப்பின் போது மூவர் உயிரிழந்தது திரையுலகைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூவரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குநர் கவிதா பாரதி தனது முகநூல் பக்கத்தில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பூஜையில் ஈடுபட்ட அர்ச்சகர் தவறி விழுந்து உயிரிழந்த போது அவரின் குடும்பத்தினருக்குக் கருணைத்தொகையாக
ரூபாய் 5 லட்சம் முதல்வர் வழங்கினார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கவிதா பாரதி ”அதுபோல தற்போது உயிரிழந்த திரைப்படத் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், ”எதிர்வரும் காலத்திலும் பணியிலிருக்கும்போது திரைப்படத்தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதை அறிவித்து நடைமுறையாக்க வேண்டும். நலிவடைந்த குடும்பமெனில் குழந்தைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகையும், முன்னுரிமையும் வழங்க வேண்டும்” என்று முகநூலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாம் அவரிடம் பேசியபோது, ”ஒரு வருடத்தில் 200 படங்கள் எடுக்கிறார்கள் என்றால் அதில், 10 சதவிகிதம் அதாவது 20 படங்கள் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்களாகும். மீதமுள்ளவை 2 கோடி ரூபாய், 3 கோடி ரூபாய் என குறைந்த பட்ஜெட்டில், தயாரிப்பாளர்கள் அங்கும் இங்கும் பணத்தைப் புரட்டி அதன் மூலம் எடுக்கக் கூடிய படங்கள்தான் அதிகம். அதிகளவிலான தொழிலாளர்கள் இதுபோன்று, உத்தரவாதம் இல்லாத குறைந்த பட்ஜெட்டை கொண்ட படங்களில் தான் வேலை செய்கின்றனர். அப்போது படப்பிடிப்பில் ஏதாவது விபத்து நடக்குமானால் அந்த தயாரிப்பாளர்களால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்கு வாய்ப்பு இருக்காது. தொழிலாளர்கள் இந்த மாதம் பெரிய பட்ஜெட் படத்தில் வேலை செய்கிறார்கள் என்றால், அடுத்த மாதம் குறைந்த அளவிலான பட்ஜெட் படங்களிலும் சின்னத்திரையிலும் தான் வேலை செய்வார்கள். எல்லா மாதங்களில் வேலை இருக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. எனவே அரசாங்கம் திரையுலக மற்றும் சின்னத்திரை தொழிலாளர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.
அவரிடம் இந்தியன் 2 படம் என்பது பெரிய பட்ஜெட் படம் தானே என்று கேள்வி எழுப்பியதற்கு, “பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிற பெரிய பெரிய நடிகர்களுக்கு அதற்கேற்றவாறு சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தவரை எந்த படத்தில் நடித்தாலும் ஒரே மாதிரியான ஊதியம் தான் வழங்கப்படும். அவர்களுக்கு உயர்த்தி வழங்கப்படாது. எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்று பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
**-கவிபிரியா**
�,”