அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, படங்களின் மூலம் தலித் உரிமைகள் பேசும் இயக்குநராக கவனம் ஈர்த்தவர் பா.ரஞ்சித்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். அந்த ஆண்டு திரையரங்குகளில் வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் பட்ஜெட் அடிப்படையில் அதிக லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்த படங்களில் முதல் இடத்தை பிடித்தது பரியேறும் பெருமாள்.
தலித் உரிமை பேசும் படமாக இருந்தாலும் திரைமொழியில் அதனை கையாண்ட விதம் காரணமாக அனைத்து சமூகத்தினரின் பாராட்டுக்களையும் பெற்ற படமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்றொரு படத்தை தயாரித்தார். சர்வதேச ஆயுத வியாபாரத்தை பற்றி பேசிய இந்த படம் வணிகரீதியாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படமானது.
இந்த நிலையில் சில பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தனது நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகியோர்கள் படங்களை இயக்குவதாக அறிவித்தார்.
இந்த 5 படங்களின் தயாரிப்பில் நீலம் புரடொக்ஷன்சுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்புக்கான முதலீட்டாளர்களாக இருப்பார்கள் என பா.ரஞ்சித் கூறியிருந்தார்.
இந்நிலையில், அறிவிப்பு வெளியான ஐந்து இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, மகேஸ்வரி, லிசி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்திருக்கும் ரைட்டர் படம் முடிவடைந்து வெளியிட தயாராக உள்ளது.
பா. ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் இருந்து ரஜினிகாந்த் நடித்த காலா படம் வரையில் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர்தான் பிராங்களின். இருந்த போதிலும் தனியாக படம் இயக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கூறியதாவது,
உதவி இயக்குநர் வேலையை செய்துகொண்டே தனியாக படம் இயக்கும் முயற்சியில் பல தயாரிப்பாளர்களை சந்தித்து ரைட்டர் படத்தின் கதையை கூறினேன். அப்போது அவர்கள் எல்லாம் சிங்கம் மாதிரி சிறுத்தை மாதிரி, சாமி மாதிரி போலீஸ் கதை கொண்டு வாருங்கள் என்றார்கள்.
அடிதடி போலீஸ் பற்றியும், ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் உள்ள போலீஸ் பற்றியும் நிறைய படங்கள் வந்து விட்டதே. இது ஒரு காவல் நிலையத்தின் ரைட்டரின் யதார்த்த வாழ்க்கை என்று சொன்னால், இந்த படத்துக்கு விருது கிடைக்கலாம் தியேட்டரில் கல்லா நிரம்பி வழியும் வசூல் வராதே என்று சொன்னார்கள்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட ரஞ்சித் அண்ணா, கூப்பிட்டு என்ன கதை, அதை சொல் என்று கேட்டார். அப்போது நான் தயாராக வைத்திருந்த மூன்று கதைகளை சொன்னேன்.
அதில் அவர் தேர்வு செய்தது ரைட்டர் கதையை. அதோடு இந்த கதையில் சமுத்திரகனி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரே நடிகரையும் தேர்வு செய்தார். காலா படத்தில் சமுத்திரகனியோடு பணியாற்றியதால் அவரிடம் கதை சொன்னதுமே ஒப்புக் கொண்டார்.
இப்படித்தான் ரைட்டர் உருவானது. சமுத்திரகனி ஒரு காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிக் கொண்டு அதிகார வர்க்கத்துக்கும், நடுத்தர குடும்ப வாழ்க்கைக்கும் இடையில் நடத்தும் தனி மனித போராட்டம்தான் திரைக்கதை.
காவல் துறைக்கும், மக்களுக்குமான இடைவெளியை இந்த படம் குறைக்கும். காவல்துறையில் உள்ளவர்களும் நம்மை போன்ற சராசரி மனிதர்கள்தான் என்ற எண்ணத்தை மக்களிடம் இந்தப் படம் கொண்டு செல்லும் என்கிறார் இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப்.
**-இராமானுஜம்**
.�,