‘பத்மஸ்ரீ விருதை திரும்ப வாங்குங்கள்’: கங்கனாவுக்கு எதிர்ப்பு!

Published On:

| By Balaji

அரசியல்வாதிகளுக்கு இணையாக விவகாரமாகும் வகையில் கருத்துக்களை கூறுவதில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத்.

சாதனையாளர்களுக்கான ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதை சில தினங்களுக்கு முன்பெற்ற இந்தி நடிகை கங்கனா ரணாவத், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொள்வது உண்டு. கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்துகள் காரணமாக, ட்விட்டர் நிறுவனம் அவரின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிவிட்டது.

முன்னதாக, “தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் அலுவலகங்களுக்கு நடந்து செல்ல வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தது, விவாதத்துக்குள்ளானது. இந்த நிலையில், கங்கனா ரணாவத் இந்தியா சுதந்தரம் பெற்றது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இது சம்பந்தமாக கங்கனா ரணாவத் பேசிய 24 விநாடிகள்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த வீடியோவை பாஜக எம்.பியும் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் கங்கனா ரணாவத், “நாடு உண்மையிலேயே 2014-ம் ஆண்டுதான் சுதந்திரம் அடைந்தது. 1947-ம் ஆண்டு கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?” என்றும் பேசியிருந்தார். டி.வி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, கங்கனா ரணாவத் இப்படிப் பேசியிருக்கிறார் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் வருண் காந்தி, கங்கனாவின் கருத்து தேசவிரோதச் செயல். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இப்படி இழிவுபடுத்தக் கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்று கங்கனாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அதேபோல, கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பிரீத்தி மேனன், முறைப்படி கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி புகார் கொடுத்திருக்கிறார்

இந்திய தேசியகாங்கிரஸ் கட்சியும் கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கட்சி ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அரசியல் கட்சியினரைத் தாண்டி, சமூகச் செயற்பாட்டாளர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கங்கனாவின் இந்தச் சர்ச்சை கருத்துக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர்.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share