அஜித் – விஜய் படங்கள்: நேரடி மோதல் சாத்தியமாகுமா?

Published On:

| By Balaji

தமிழகத்தில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பார்வையாளர்களில் அதிகமான எண்ணிக்கையில் ஆதரவாளர்களை பெற்றுள்ள நடிகர்கள் விஜய், அஜித்குமார் இருவரும் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி எட்டு வருடங்கள் ஆகிறது.

2014ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி விஜய் நடித்த ‘ஜில்லா’, அஜித் நடித்த ‘வீரம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டுமே சுமாரான வெற்றியைத்தான் பெற்றன. அதற்குப் பிறகு இருவரது படங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளவில்லை. அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் கடந்த வாரம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா காரணமாக, 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால், பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே, விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாத வெளியீடு என அறிவிக்கப்பட்டு தான் படப்பிடிப்பு நடந்து வந்தது. ‘வலிமை’ படத்தின் அடுத்த வெளியீட்டுத் தேதி எப்போது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த கொரோனா அலைக்குத் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தியேட்டர்கள் பக்கம் மிக மிகக் குறைந்த அளவில்தான் வருகிறார்கள். மக்களை மீண்டும் வரவழைக்க ‘வலிமை, பீஸ்ட்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக வேண்டும், அல்லது ஒரே நாளில் வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருட அலையின்போது ‘மாஸ்டர்’ படம் வெளிவந்துதான், திரையரங்குக்கு பார்வையாளர்களை பயம் இன்றி வர வைத்தது. இந்த வருடம் மூன்றாம் அலைக்குப் பிறகு ‘வலிமை, பீஸ்ட்’ போன்ற படங்கள் வந்தால் தியேட்டருக்கு பார்வையாளர்களை அதிகம் ஈர்க்க முடியும் என திரையரங்குகள் எதிர்பார்க்கின்றன.

ஆனால், முன்னணி கதாநாயகர்கள் நேருக்கு நேர் மோதி தங்களது உண்மையான பலத்தை அறிந்து கொள்ளும் பலப்பரீட்சையில் ஈடுபட தயாராக இல்லை என்கின்றனர் நடிகர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

**இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share