நடிகர் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 66’ படப்பிடிப்பு எப்போது தொடங்க இருக்கிறது என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். அவரது போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்த வருடம் கோடை விடுமுறையையொட்டி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் போதே நடிகர் விஜய்யின் 66வது படமாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்தான அறிவிப்பு வெளியானது. தெலுங்கு- தமிழ் என இருமொழிகளில் நேரடியாக படம் உருவாக இருக்கிறது. நடிகர் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த படம் குறித்தான தகவலை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார், ‘தளபதி 66’ படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. படப்பிடிப்பு முழுவதுமாக முடித்து இந்த வருடம் தீபாவளிக்கே வெளியிட திட்டமிட்டுள்ளோம். நடிகர் விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது. கதை கேட்டு முடித்ததும், ‘கடந்த 20 வருடங்களில் நான் கேட்ட கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான்’ என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார். இயக்குநர் வம்சி மிக சிறந்த கதையை உருவாக்கியுள்ளார் ” என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த தகவல் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
**ஆதிரா**
�,”