இந்தியாவில் அடுத்த (பிப்ரவரி) மாதம் நடைபெறவிருக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முதலில் அறிவிக்கப்பட்டபடி ஆறு இடங்களுக்குப் பதிலாக இரண்டு இடங்களில் மட்டுமே நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பாதுகாப்பு நடவடிக்கையாக, முதலில் அறிவிக்கப்பட்டபடி தொடரை ஆறு இடங்களுக்குப் பதிலாக இரண்டு இடங்களில் மட்டுமே நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும் நடைபெறும்.
அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
இதற்கடுத்து, கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15ஆவது தொடர் மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் ஆமதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிற நிலையில் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் தான் உறுதியாக உள்ளோம் என்றும் ஜெய் ஷா தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்த காரணத்தால் ஐபிஎல் 13ஆவது தொடர் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. அதேபோல் 14ஆவது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் பாதியில் நிறுத்தப்பட்டு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.�,