பெரிய சம்பளத்துடன் வந்த படத்தை தவிர்த்த விஷால்… நெகிழ்ச்சியான காரணம்!

Published On:

| By Balaji

பாஞ்சாலங்குறிச்சி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் கே.பி.பிலிம்ஸ் பாலு. சிறந்த தயாரிப்பாளர், திரைத்துறையில் நற்பெயர் கொண்ட இவர் சமீபத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். உடல்நலன் மீது அக்கறை கொண்டவர் தயாரிப்பாளர் பாலு. அதுமட்டுமல்ல, சந்திக்கும் நபர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் குறித்துப் பரிந்துரை செய்வார்.

அப்படியான ஒரு மனிதரின் மறைவு நிச்சயம் திரைத்துறையில் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகியிருக்கிறது. அவரின் எதிர்பாராத மரணம், குடும்பத்துக்கும் பொருளாதார நிலையில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தயாரிப்பாளர் பாலு மறைவுக்கு முன்பு, விஷால் நடிப்பில் படம் ஒன்றைத் தயாரிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அந்தப் படத்துக்கான முழு சம்பளமும் விஷாலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கான தொகையையும் செலவு செய்திருக்கிறார். இந்த நேரத்தில் தான், இவரின் எதிர்பாராத மரணம் நிகழ்ந்தது.

சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தயாரிப்பாளர் பாலுவுக்காக நினைவஞ்சலி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. விஷால் வராவிட்டாலும் அவரின் மேலாளர் ஹரியை அனுப்பி வைத்திருந்தார். அந்த கூட்டத்தில், யாரும் எதிர்பாராத ஒரு உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறது விஷால் தரப்பு.

கே.பி.பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் பூஜை ஸ்டில்களை சமர்ப்பித்து, நிச்சயம் இந்தப் படம் நடக்கும் என்று உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார்கள் விஷால் தரப்பினர். அதுமட்டுமல்ல, ஒரே ஷெட்யூலில் முழு படத்தை முடிக்கவும், விரைவில் முடித்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம் விஷால். அந்தப் படத்திலிருந்து வரும் வருமானம் சீக்கிரமாகவே தயாரிப்பாளர் பாலுவின் குடும்பத்திற்குச் சென்று சேரவேண்டும் என்றும் விரும்புகிறார் விஷால். இந்த செய்தியை விஷாலின் மேலாளர் ஹரி அக்கூட்டத்தில் கூறியிருக்கிறார். அதைத் தயாரிப்பாளர் டி.சிவா உறுதியும் செய்திருக்கிறார்.

ஆக, படம் வருகிற மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். எப்படியும் ஆறு மாதத்துக்குள் முழு படத்தையும் முடித்து, கிடைக்கும் லாபமானது கே.பாலுவின் குடும்பத்திற்குச் சேர இருக்கிறது.

நிறையத் தயாரிப்பாளர்களிடம் படம் நடிக்க அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறார் விஷால். யாருக்கும் இன்னும் படம் நடித்துக் கொடுக்கவில்லை. அப்படியே தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவருக்கு, கே.பாலுவின் மரணம் ஆழ்ந்த சோகத்திற்கு உட்படுத்தியிருக்கிறது. அதனால், உடனடியாக உதவ முன்வந்திருக்கிறார் விஷால்.

கூடுதல் விஷயம் என்னவென்றால், அதே மார்ச் மாதத்தில் இன்னொரு புதிய தயாரிப்பு நிறுவனம், அதிக தொகைக்குப் பெரிய பட்ஜெட்டில் இன்னொரு படத்துக்காக விஷாலை அணுகியிருக்கிறது. அந்தப் படத்தை மறுத்துவிட்டு, கே.பி.பிலிம்ஸூக்கு படம் நடிக்க விஷால் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share