புதுப்படங்களில் வேகம் காட்டும் விஷால்: துப்பறிவாளன் 2 நிலை?

Published On:

| By Balaji

விஷாலுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தப் படம் ‘இரும்புத்திரை’ இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான சண்டைக்கோழி 2, அயோக்யா, ஆக்‌ஷன் மற்றும் சக்ரா என எந்தப் படமும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. தொடர்ச்சியான தோல்விப் படங்களால் விஷாலுக்கான மார்கெட்டும் கொஞ்சம் சரிந்திருக்கிறது. அதை மீட்டெடுக்கும் பணிகளில் மும்மரமாக இறங்கியிருக்கிறார் விஷால்.

விஷால் நடிப்பில் அடுத்த ரிலீஸ் எனிமி. ஆர்யாவுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக மிர்ணாளினி ரவி நடித்திருக்கிறார். தமன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை துபாயில் படக்குழு முடித்தது. ரிலீஸூக்கானப் பணிகளில் படக்குழு இருக்கிறது. இந்நிலையில், அடுத்தப் படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் விஷால்.

விஷால் நடிக்க இருக்கும் 31வது படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். யுவன் இசைக் கோர்ப்பில் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது துவங்கிவிட்டது. தமிழகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லையே, பின்னர் எப்படியென யோசிக்கலாம். ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை சமீபத்தில் படக்குழு துவங்கியது. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்துவரும் நிலையில், ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், தமிழ் திரையுலகத்தினர் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்துக்குப் படையெடுத்துவருகின்றனர். முதல் ஆளாக துண்டு போட்டு சீட் பிடித்துவிட்டார் விஷால்.

இந்தப் படம் துவங்கிவிட்டால், பாதியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் துப்பறிவாளன் 2 நிலை என்னவாகும் என விசாரித்தால், புது தகவல்களும் கிடைத்தது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் , பிரசன்னா நடிக்க வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றப் படம் துப்பறிவாளன் . கணியன் பூங்குன்றனாக விஷால் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார். இந்த படத்தின் வெற்றியினால், இரண்டாம் பாகத்தை துவங்கினார்கள். படப்பிடிப்புக்காக லண்டன் வரை சென்றது படக்குழு. சென்ற இடத்தில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இருந்த கருத்துவேறுபாட்டினால் படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். பாதிப் படப்பிடிப்புடன் நிற்கும் படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் விஷால்.

விஷால் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படம் உருவாகிவருவதாக அறிவிப்புகள் கூட வெளியானது. ஆனால், படப்பிடிப்பு துவங்காமல் இருந்ததால், படம் ட்ராப் என்று கூட தகவல்கள் வெளியானது. இந்நிலையில், படப்பிடிப்பை ஜனவரி 2022ல் துவங்கும் திட்டத்தில் இருக்கிறார் விஷால்.

மிஷ்கின் எழுதிய ஸ்கிரிப்டில் அவரின் சகோதரரும் நடிப்பது போல கதை அமைத்திருக்கிறார். தற்பொழுது, விஷாலுடன் பிரச்னை ஆகிவிட்டதால் சகோதரரை நடிக்க வேண்டாம் என்று மிஷ்கின் கூறிவிட்டாராம். அதனால், கதையை மீண்டும் மாற்றி எழுதிவருகிறாராம் விஷால். முழு கதையும் ஃபைனல் செய்துவிட்டு, எடுத்த வரைக்குமான படத்தின் பணிகளை ஆய்வு செய்துவிட்டு, படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் விஷால். அதனால் தான், இந்த நீண்ட கால இடைவெளியை எடுத்திருப்பதாகவும் தகவல்.

மிஷ்கின் துவங்கிய படம், விஷால் முடித்து ரிலீஸ் செய்ய இருக்கிறார். இந்த கலவையில் படம் எப்படியாக வர இருக்கிறது என்பதில் ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

**- ஆதினி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share