மிஷ்கின் கைவிட்ட துப்பறிவாளன் 2: வில்லங்கமா? விளம்பரமா?

Published On:

| By Balaji

துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தான் இயக்கவுள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்தும் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. விஷால், தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்)’ மூலம் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் இயக்குகிறார் என்றும், படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றும் அறிவித்திருந்தனர். இந்தத் தகவல் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் விஷால் மற்றும் மிஷ்கினுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் உச்சமாக மிஷ்கின், படத்தில் இருந்து விலகுவதாகவும், படத்தைத் தானே இயக்கவுள்ளதாகவும் விஷால் அறிவித்திருக்கிறார்.

இன்று(மார்ச் 11) துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ள நிலையில் நேற்றே அதுபற்றிய அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் மிஷ்கின் பெயர் இடம்பெறாமல் விஷால் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இந்தப் போஸ்டர் ரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த அறிக்கையில்,

**ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன?** என்று ஆரம்பித்து மிஷ்கினால் தான் சந்தித்த பிரச்னைகள் குறித்து விளக்கியுள்ளார். அதில், “கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குநர், தயாரிப்பாளர்கள் பணத்தை ரூ.35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு இயக்குநர் ஒரு திரைப்படத்திலிருந்து விலகுவது ஏன்? ஒரு தயாரிப்பாளராக, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை. படத்தின் தயாரிப்பின் போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா? UK-வில் 3 முதல் 4 மணிநேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.” என்று தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைத் தொகுத்து ஒவ்வொன்றிற்கும் விடையளித்துள்ளார்.

மேலும், “ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்கு பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை. நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அனாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது. இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் விஷால் ஃபிலிம் பேக்டரி (வி.எஃப்.எஃப்) அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்கு சரியானதா? திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?” என்று இயக்குநர் மிஷ்கினை குற்றவாளி கூண்டில் நிறுத்தி கூர்மையான கேள்விகளைக் கேட்பதாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.

தொடர்ந்து “நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுக தயாரிப்பாளரோ, அறிமுக தயாரிப்பாளரோ என எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்க கூடாது என்பதற்காகத்தான். மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்ல வேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கி சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதிசெய்கிறேன்.

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல, ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘துப்பறிவாளன்-2’ படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.

இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று இயக்குநர்களால் பாதிப்படையும் தயாரிப்பாளர்களின் வலிகளைப் பட்டியலிட்டு, துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கான காரணம் என்ன என்பதை விஷால் விளக்கியுள்ளார்.

விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்களையும் தாண்டி, கடந்த மார்ச் 4ஆம் தேதி மிஷ்கின் தயாரிப்பு நிறுவனத்திற்கு விதித்த நிபந்தனைகள் தான் அவர் படத்திலிருந்து நீக்கப்படக் காரணமாக அமைந்தது என்று விஷாலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஹாலிவுட் தரத்தில் எடுக்க வேண்டும் என்று விஷால் கேட்டுக்கொண்டதற்கு, ஹாலிவுட் இயக்குநர்களுக்கு இணையான சில நிபந்தனைகளை மிஷ்கின் விதித்திருந்தார். இது தொடர்பாக நமது மின்னம்பத்தில் [5 கோடி-ஒரு ஆஃபீஸ்: துப்பறிவாளனுக்கு மிஷ்கினின் நிபந்தனைகள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/entertainment/2020/03/04/66/Mysskin-demands-5-crore-for-thupparivaalan-second-part) என்ற தலைப்பில் மார்ச் 4ஆம் தேதியே செய்தி வெளியிட்டிருந்தோம். விஷால் மற்றும் மிஷ்கினுக்கு இடையே ஏற்கனவே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் மிஷ்கினின் இந்த நிபந்தனைகள் விஷால் தரப்பை மேலும் அதிருப்தி அடையச் செய்தது.

**மிஷ்கின் விதித்த நிபந்தனைகள்**

1. சம்பளம் 5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி உட்பட

2. ரீமேக் உரிமைகள்: இயக்குநரிடம் இந்தி ரீமேக் உரிமை மட்டுமே உள்ளது. இதில் தயாரிப்பாளருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. இயக்குநர் இந்தி திரைப்பட ரீமேக்கை எவருக்கும் விற்க முடியும். இதில் தயாரிப்பாளருக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்கக்கூடாது.

3. IPR: விஷால் ஒரு நடிகராகவும், விஷால் ஃபிலிம் ஃபேக்டரியை தயாரிப்பாளராகவும் கொண்டுள்ள இப்படம் கடைசியாக இருக்கும் என்பதால், தலைப்பு, படத்தின் தொடர்ச்சிகள் ( Sequels and Prequels ), கணியன் பூங்குன்றன், மனோகரன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்கள், துப்பறிவாளன்- 1, துப்பறிவாளன்- 2 படத்தில் இருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களின் பெயர்கள் என அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் இயக்குநருக்குச் சொந்தமாகும். விஷால் பிலிம் ஃபேக்டரியிலிருந்து இயக்குநரின் பெயருக்கு படத்தின் தலைப்பு உரிமையை மாற்றியதற்காகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை வழங்கும்.

4. தனித்துவமற்றது: இரண்டாம் கட்டப் படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்து 90 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறாவிட்டால் இயக்குநர் மற்ற படங்களில் இணைந்து பணியாற்றலாம். எந்தவொரு காரணத்திற்காகவும் 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநருக்கு மீண்டும் நேரம் கிடைக்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.

5. அணுகுமுறை: தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகளுக்கு இயக்குநருடன் நேரடித் தொடர்பு இருக்காது. இயக்குநரின் மேலாளர் எல்.வி. ஸ்ரீகாந்த் லக்‌ஷ்மண் மட்டுமே இயக்குநரைத் தொடர்புகொள்ளும் ஒரே நபராக இருப்பார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரியால் நியமிக்கப்பட்ட (நிர்வாக) தயாரிப்பாளர் சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரைத் தொடர்புகொள்ள அவரது பிரதிநிதியாக செயல்படுவார்.

6. மேற்கண்ட நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் இயக்குநருக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணம் இயக்குநரால் முடிவு செய்யப்படும்.

7. இயக்குநரின் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் (இங்கிலாந்தில் கார் வாடகை உட்பட) முன்பே தீர்க்கப்பட வேண்டும்.

8. படப்பிடிப்புத் தளம்: படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும் அனைத்து உரிமைகளும் இயக்குநரையே சாரும். தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகள் இதில் தலையிடக்கூடாது.

9. நிதி: படத்தின் பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆனால், செலவினங்களைக் குறைக்க இயக்குநர் சிறந்த முயற்சிகளை எடுப்பார். இருப்பினும், படத்தின் மொத்த செலவுகளுக்கு இயக்குநர் எந்தவித வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்.

10. உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநருக்கான சம்பளம்: தணிக்கை விண்ணப்பிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் இயக்குநரால் நிர்ணயிக்கப்பட்டபடி சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

11. தங்கும் விடுதி: இயக்குநர் மற்றும் இயக்குநரின் உதவியாளர்களுக்கு, இயக்குநரின் விருப்பத்திற்கு இணங்க தனித் தங்குமிடம் வழங்கப்படும். மற்ற படக்குழுவினர்களுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

12. அலுவலக வாடகை: 66,000 ரூபாய் அலுவலக வாடகை மற்றும் 5,000 ரூபாய் பராமரிப்புத் தொகை தயாரிப்பாளரால் செலுத்தப்படும். TDS சான்றிதழ், கழிக்கப்பட்டால், தணிக்கைக்கு முன் வழங்கப்படும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக, மின்சாரச் செலவு, உணவுச் செலவுகள் மற்றும் பிற தற்செயலான அலுவலகச் செலவுகள் போன்றவை பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து படத்தின் இறுதி வடிவம் ஒப்படைக்கப்படும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.

13. தகவல் தொடர்பு: படத்தைப் பற்றிய அனைத்துத் தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும்.

14. இடையூறு: இயக்குநர் தனது படைப்பு சுதந்திரம், ஆக்கபூர்வமான முடிவெடுக்கும் முறைமை ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது இயக்குநர் மற்றும் அவரது ஊழியர்கள் அவமதிக்கப்படுதல், துஷ்பிரயோகம் செய்யப்படுதல், அச்சுறுத்தப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், மேலும், இயக்குநரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்ததேயானால் இயக்குநரும் அவரது குழுவினரும் இப்படத்திலிருந்து வெளியேற முழு உரிமை உண்டு.

15. மேற்சொன்ன விவரங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், அதன் சாராம்சம், முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு, இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்படும்.

மேற்கூறிய விஷயத்தில் ஏதாவது ஒன்றைத் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், ‘துப்பறிவாளன்- 2’ படத்தைப் பொறுத்தவரை, விஷால் ஃபிலிம் ஃபேக்டரிக்கு செய்யும் வேலைகளை இயக்குநர் நிறுத்தலாம்.

என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநர் மிஷ்கின் நிபந்தனைகள் விதித்திருந்தார். இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததாலும், முயலாததாலும்தான் விஷால் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதற்கு அவர் தரப்பில் பல நியாயங்களும் இருக்கிறது. ஆனால் மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் அடங்கிய தனிப்பட்ட கடிதத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டது, தனது நிலைமையை விளக்குவதற்காகவா? அல்லது படத்திற்கு விளம்பரம் தேடுவதற்காகவா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share