சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ஆக்ஷன். இந்தப் படம் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. விஷாலுக்கு அடுத்ததாக ரிலீஸூக்கு ரெடியாக இருக்கும் படம் சக்ரா.
சக்ரா படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கியிருக்கிறார். சக்ரா படம் முழுமையாக தயாராகிவிட்டது. விஷாலுக்கு நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடித்திருக்கிறார்கள். அதோடு, ஆர்மி அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார். ரோபோ ஷங்கர் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
இந்தப் படம் பெரும் தொகைக்கு ஓடிடிக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், இந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் & ஈஸ்வரன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், அனைத்து நடிகர்களுமே படத்தை தியேட்டரில் வெளியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள். அப்படி, விஷாலின் சக்ராவும் முதலில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
பிப்ரவரியில் எப்படியும் இந்தப் படம் திரையரங்கிற்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிப்ரவரி மாதமானது நிறைய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சுனைனா, யோகிபாபு நடிக்கும் ட்ரிப் படம் பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தனுஷின் ஜெகமே தந்திரம் படம் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஷாலின் சக்ராவும் பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது.
படத்தின் டிரெய்லர்கள் வெளியாகி ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். திரையரங்கில் வெளியிட்டு முப்பது நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படம் விஷாலுக்கு அடுத்து உருவாகிவருவதும் குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**�,