வைரஸாய் வந்து இயற்கை நமக்கு பாடம் புகட்டியிருக்கிறது என்று பாடல் பாடும் வடிவேலு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் அனைத்து தொழிலும் முடங்கியுள்ளது. விவசாயம் முதல் சினிமா படப்பிடிப்பு வரை அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி வேறு எதற்கும் வெளியே வராமல் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.
கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல, உலகின் பொருளாதார இயக்கம் முடங்கியுள்ள இந்தக் காலத்தில் இயற்கை வளங்கள் சுத்தமாகி வருகின்றன. மனித செயல்பாடு குறையும்போது கார்பன் உமிழ்வு வீழ்ச்சியடைந்து காற்றின் மாசு குறைந்து வருகின்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்கள் முதலில் விண்வெளியில் இருந்து தெரிந்த போது, இயற்கை நிம்மதியாக மூச்சுவிடுகின்றது என்றனர் சுற்றுப்புற ஆர்வலர்கள். மோட்டார் வாகனங்கள் ஓடாததால், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், நகரங்கள் மற்றும் தொழில்துறை மையங்களில் மாசுபடுத்தும் பெல்ட்கள் சுருங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஊரடங்கினால் இயற்கைக்கு ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக வடிவேலுவும் பாடல் பாடி வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். வடிவேலுவின் பாடல் வரிகள்:
காடுகளை அழித்தோம்
மண் வளம் கெடுத்தோம்
நீர்வளம் ஒழித்தோம்
நம் வாழ்க்கை தொலைத்தோம்
வைரஸாய் வந்தே நீ
பாடம் புகட்டி விட்டாய்
இயற்கையை மதிக்கின்றோம்
இத்தோடு விட்டுவிடு
என வடிவேலு பாடியுள்ளார்.
[வடிவேலு பாடல்](https://twitter.com/vadiveluoffl/status/1250436107440771072?s=21)
கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/rD486Yek42
— Actor Vadivelu (@VadiveluOffl) April 15, 2020
இதற்கு முன் வடிவேலு ‘யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்’ என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
**முகேஷ் சுப்ரமணியம்**�,”