ஜெராட் கிம்பர்
இது விராட் கோலியை பற்றியோ அவருடைய கேப்டன்சி தகுதிகளைப் பற்றிய கட்டுரையோ அல்ல. ஏனென்றால் ஒருவருடைய கேப்டன்சி தகுதிகளைப் பற்றி உண்மையில் அத்தனை எளிதாக நம்மால் தீர்மானித்துவிட முடியாது.
அடிப்படை விஷயங்களில் இருந்து ஆரம்பிப்போம். ஒரு அணியின் பேட்டிங் வரிசையை கேப்டன்தான் முடிவுசெய்கிறார். அவசரத் தேவைகள் ஏற்பட்டால் ஒழிய, டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் வரிசையை யாரும் அவ்வளவு சீக்கிரம் மாற்றியமைப்பது கிடையாது. இன்றைய காலகட்டத்தில் அணியின் பேட்டிங் வரிசையை முடிவு செய்யும் இடத்தில் கேப்டனைவிடப் பயிற்சியாளருக்குத்தான் பங்கு அதிகம்.
போட்டியின் முடிவை மாற்றுவதில் டாஸ், ஒரு முக்கியப் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதேநேரம் டாஸில் வெற்றி பெறுவதை அதிர்ஷ்டமும் தீர்மானிக்கிறது. எனவே டாஸ் முடிவைக் கொண்டு கேப்டனின் வெற்றி தோல்வியை மதிப்பிடுவது என்பது சரியான மதிப்பீடாக இருக்க முடியாது. ஒரு கேப்டனால் செய்ய முடிந்தது எல்லாம் நாணயத்தைச் சுண்டிவிடுவது மட்டும்தான். அல்லது பூவா, தலையா என்று ஆரூடம் சொல்வது மட்டும்தான்.
**பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதம் **
பந்து வீச்சாளர்களை மாற்றுவதில் கேப்டனின் பங்கு என்ன? நான்கு பேர் கொண்ட பந்துவீச்சுப் படையில் அதிகம் களைப்படையாதவர் யார் என்று பார்த்து அவரைப் பந்து வீச கேப்டன் அழைப்பார். ஆனால் அதிலும்கூட யாருக்கு எதிராக யார் வீச வேண்டும் என்பது போன்ற சமாச்சாரங்கள் முன்னதாகவே அணி நிர்வாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கும். பார்ட் டைம் பந்துவீச்சாளர்களை கேப்டன் தன் விருப்பத்துக்கு ஏற்றபடி பயன்படுத்தலாம். ஆனால் அதுவும் ஆட்டத்தின் தேவையையும் சூழ்நிலைகளையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
ஐந்து பேர் கொண்ட பந்துவீச்சுப் படை என்று வரும்போது, ஒரு கேப்டனுக்கு வியூகம் வகுப்பில் வேலை அதிகம். ஒரு கேப்டனாக இங்கு கோலி, தன்னுடைய வியூகங்களை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அப்போதும் சில காரணிகள் கேப்டனின் முடிவில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்க முடியும். இரண்டாவது புதிய பந்து அப்போது தான் எடுக்கப்பட்டிருக்கும் அல்லது பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியிருக்கும் அல்லது இடக்கை பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்திருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் கேப்டனின் தனிப்பட்ட விருப்பத்தைவிட சூழ்நிலைகள் தான் யார் அடுத்து பந்துவீச வேண்டுமென்பதை முடிவுசெய்யும்.
கள வியூகத்தை அமைப்பதில் கேப்டனின் பங்கு என்ன? உதாரணமாக மூன்றாவது ஸ்லிப்பில் நிற்பவர் பந்தைப் பிடித்துவிட்டார் எனச் சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட பந்து மூன்றாவது ஸ்லிப்பில் தஞ்சமடைவதற்கு முன்பாக கேப்டன் செய்த கள வியூகங்களை மறந்துவிடுகிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பந்துவீச்சாளர் லெக் சைட் பவுண்டரியில் ஐந்திற்கும் மேற்பட்ட பீல்டர்களை நிற்க வைத்துவிட்டு பவுன்சர் வீசினால் பேட்ஸ்மேன் சுதாகரித்து விடமாட்டாரா? அதனால் அதிகமான ஆட்களை நிற்க வைக்காமல், பேட்ஸ்மேன் எதிர்பாராத நேரத்தில்தான் பவுன்சர் வீசுவதற்கு கேப்டன் வியூகம் வகுப்பார். அது சரியாக பீல்டர் கையில் தஞ்சம் புகுந்தால் பேட்ஸ்மேன் காலி; அதுவே ஆள் அரவமற்ற இடத்தில் விழுந்தால் கேப்டனின் கள வியூகத்தை விமர்சனம் செய்வோம். இன்னும் ஒரு ஆளை அந்த இடத்தில் போட்டிருந்தால்தான் என்ன என்போம். இதெல்லாம் மிகவும் நுட்பமான விஷயங்கள். இதைக் கொண்டு கேப்டனை மதிப்பிடுவது என்பது இயலாத காரியம்.
**மூன்று வகை கேப்டன்கள்**
நாம் நிறைய ஆட்டங்களைப் பார்த்து வருகிறோம். அந்த அனுபவத்தில் இருந்து கேப்டன்களை மூன்று வகையினராகப் பிரித்துக்கொள்வோம். முதலாவதாக சுறுசுறுப்பான கேப்டன். இவர் களத்தில் ஏதாவது ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். அடுத்ததாக தற்காப்பு பாணி கேப்டன். இவர் அதிகம் ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தபவர். கடைசியாக வருபவர்தான் பால் சேசிங் கேப்டன். இவருடைய பாணி எப்படி என்றால், முந்தைய பந்து எங்கு அடிக்கப்பட்டதோ அந்த இடத்தில் பீல்டர்களை நிறுத்துவார்கள்.
எல்லா கிரிக்கெட் கேப்டன்களும் இந்த மூன்று பாணியும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்தவர்களாகவும் அதில் ஒரு பாணியில் கூடுதல் நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பர். விராட் கோலி சேசிங் கேப்டன்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்.
இந்த பால் சேசிங் கேப்டன்சி எப்போது எடுபடும்? ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து ஸ்லிப்பில் பந்தைத் தட்டிக்கொண்டே இருக்கிறார். உடனே எதிரணி கேப்டன் இன்னொரு பீல்டரை ஸ்லிப்பில் நிற்கவைத்து விக்கெட் எடுக்க முயற்சிக்கிறார். இதுதான் பால் சேசிங். ஆனால் தகுதி குறைவான பேட்ஸ்மேன்களிடம்தான் இந்தப் பாணி எடுபடும். உதாரணமாக ஒரு நல்ல பேட்ஸ்மேன் கவர் திசையில் கவர் டிரைவ் அடிக்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அங்கே ஒரு பீல்டரை நிறுத்தினோம் என்றால், அவர் அடுத்த பந்தை சாமர்த்தியமாக லெக் கிலான்ஸ் ஆடிவிடுவார். இதுதான் பால் சேசிங்கில் உள்ள பிரச்சினை.
ஆனால் இதுவரைக்கும் நான் சொன்ன எல்லாமே தனிநபர் விருப்பம் சார்ந்தவை. இதில் எது சரி எது தவறு என தீர்மானமாக ஒன்றைச் சொல்ல முடியாது. விராட் கோலி இப்படிப்பட்ட ஒரு கேப்டன்தான் என என்னால் அடித்துச் சொல்ல முடியாது. மேலும் மேற்சொன்ன கேப்டன்சி வகைமைகள் குறித்தவை எல்லாம் துல்லியமானது எனவும் சொல்ல முடியாது.
**புதியவர்களைக் கையாளும் விதம்**
ஒரு விஷயத்தில் கேப்டனின் செயல்பாடு முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அது ஒரு இளம் வீரரை அவர் எப்படி கையாள்கிறார் என்பது தொடர்பானது. அதாவது அந்த வீரரை உற்சாகப்படுத்தி மெருகேற்றுகிறாரா அல்லது அவருடைய நம்பிக்கையை குலைத்து பின்தங்க வைக்கிறாரா? வாசிம் அக்ரம் பெரிய ஜாம்பவான் ஆனதற்கு வாசிம் அக்ரமிற்கு வெறுமனே வாசிம் அக்ரம் மட்டும் இருந்தால் போதுமா? மூன்றாவது ஸ்லிப்பில் நிற்கும் பீல்டரின் உதவியும் அவசியம் அல்லவா? அதனால் டாஸ், பேட்டிங் வரிசை போன்றவற்றைவிட அணியினரிடமிருந்து முழுத் திறமையையும் வெளிக் கொணர வேண்டியதுதான் ஒரு கேப்டனின் தலையாய பணி.
ஆனால் இங்கேயும் ஒரு விஷயத்தை கவனித்துப் பார்க்க வேண்டும். தகுதியான இளம் வீரரை ஊக்குவிப்பது என்பது ஒரு கேப்டனின் கடமை தான். ஆனால் அந்த வீரர் மெருகேறுவதற்கும் வீழ்ச்சி அடைவதற்கும் கேப்டன் மட்டுமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக ஒரு பந்து வீச்சாளருக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் அவர் விக்கெட் வீழ்த்த முடியாவிட்டால் கேப்டன் என்ன செய்ய முடியும்? ஒரு செயல்படாத வீரருக்கு வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருந்தால் அணியின் வெற்றி என்னவாகுவது?
ஒரு கேப்டன் ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையில் எப்படி நல்ல விதமாகப் பங்களிக்க முடியும்? டி வில்லியர்ஸை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். லார்ட்ஸ் டெஸ்டில் டி வில்லியர்ஸ் ரொம்பவும் எளிதாகத் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்துவிடுவார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மித்தும் பயிற்சியாளர் ஆர்தரும் டி வில்லியர்ஸிடம் சில விஷயங்களை வெளிப்படையாக பேசிப் புரியவைத்தனர். அதன் பின்னர் 7 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸ் கொடிகட்டிப் பறந்தார். இது எப்படி சாத்தியமானது? என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அவ நம்பிக்கையை பொய் ஆக்குகிறேன் என அவர் தனது ஆட்டத்தைக் கூர் தீட்டியிருக்கலாம் அல்லது ஏற்கனவே அனுபவம் கொண்ட டி வில்லியர்ஸுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்வது எளிதாக இருந்திருக்கலாம். நம்மால் சரியாக கணிக்க முடியாது.
**பந்துவீச்சுப் படை **
ஸ்மித்தைப் போலவே கோலியும் நிறைய பேரின் கிரிக்கெட் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்திருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ சிலருடைய வாய்ப்புகளைப் பறிக்கவும் செய்திருக்கலாம். வெற்றிகரமான கேப்டன்கள் ஸ்டீவ் வா, ரிக்கி பான்டிங் ஆகியோரை போலவே கோலிக்கும் ஒரு வலிமையான வேகப்படை இருந்தது. இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவருடைய கேப்டன்சியை எடை போட முடியாது. ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடங்கிய பந்துவீச்சுப் படை எப்போதும் தயாராக இருந்தது. இதுதவிர உமேஷ் யாதவ், முகமது சிராஜ், அக்சர் படேல் போன்ற வீரர்களும் கோலிக்குக் கிடைத்தனர். இவையெல்லாம் ஒரு கேப்டனாக கோலிக்கு சாதகமான விஷயங்கள். ஆனால் ஒரு கேப்டனாக கோலி மீது இந்திய மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகம்.
இன்னும் சில நாட்களில் நிறைய விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் எதிர்பார்க்கலாம். விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் என்பது தொடங்கி இன்னும் பலவாறான விமர்சனங்கள். ஆனால் எதுவுமே சரியான காரண காரியங்களோடு இருக்கப்போவதில்லை. எல்லாமே கருத்துக்கள்தாம்.
விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக இருந்தவர். விராட் கோலி ஒரு நல்ல கேப்டனா இல்லையா என்பது குறித்து என்னால் தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனால் விராட் கோலி ஊடகங்களுக்கு செமத்தியாகத் தீனி போட்டுக்கொண்டிருந்தார் என்பதை உறுதியாகச் சொல்லிவிடலாம்.
*
நன்றி: **[விக்கெட்ஸ் சப்ஸ்டேக் இணையதளம்](https://wickets.substack.com/p/the-content-of-virat-kohlis-captaincy?justPublished=true)**
ஜெராட் கிம்பர்
**ஜாரோட் கிம்பர்** ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்.
சுருக்கமாகத் தமிழில்: **தினேஷ் அகிரா**
�,”