�
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனக்கு குழந்தை பிறக்கப் போகும் செய்தியை மகிழ்ச்சியோடு இன்று (ஆகஸ்டு 27) பகிர்ந்துகொண்டுள்ளார்.
விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் புகழ்பெற்று வளர்ந்து கொண்டிருக்கும்போதே இந்தி சினிமா நடிகையான அனுஷ்கா சர்மாவோடு காதல் அரும்பியது. விராட் கோலி விளையாடச் செல்லும் வெளிநாடுகளுக்கெல்லாம் அனுஷ்கா சர்மாவும் சென்று வந்தது கிரிக்கெட் செய்திகளுக்கு இணையாக பரபரப்பானது.
இந்நிலையில் இன்று சமூக தளத்தில் அனுஷ்கா வெட்கப்பட்டு சிரிக்க, அவர் பின்னால் கோலி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிக்க இருவரும் படம் வெளியிட்டு அத்தோடு, “நாங்கள் இனி மூவராகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர். கோலி, அனுஷ்கா இருவரது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் சமூக தளங்களிலும் இதை பதிவிட்டுள்ளனர். மேலும், ஜனவரி 2021 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இந்த நற்செய்தியை ஒட்டி கிரிக்கெட், சினிமா உலகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்களும் கோலியின் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கோலி தற்போது 13 ஆவது ஐபிஎல் போட்டிகளுக்காக துபாயில் இருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் இப்போது ஆடி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி, தனது இல்லற விளையாட்டிலும் வெற்றிபெற்றுவிட்டார் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.
**-வேந்தன்**�,