விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி!

Published On:

| By admin

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நாளை (பிப்ரவரி 4) தொடங்குகிறது. இந்தப் போட்டி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதைக் காண 50 சதவிகித ரசிகர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை இந்தியாவின் சார்பாக சச்சின் டெண்டுல்கர் (200), ராகுல் டிராவிட் (163), விவிஎஸ் லட்சுமண் (134), அனில் கும்ப்ளே (132), கபில்தேவ் (131), சுனில் கவாஸ்கர் (125), திலீப் வெங்சர்க்கார் (116), சவுரவ் கங்குலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103) மற்றும் வீரேந்திர சேவாக் (103) ஆகியோர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டி குறித்து, “விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கேப்டன் பதவியின் சுமையால் அவரது பேட்டிங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை காட்டினார். எல்லா இன்னிங்ஸிலும் அவர் சதம் அடித்தார். எனவே கேப்டன் பதவி அவருக்கு சுமையாக இருந்ததாக நினைக்க வேண்டாம்.
ஒரு கேப்டனாக நீங்கள் மற்றவர்களை பற்றி அக்கறைப்படுவீர்கள். இது இயல்பான வி‌ஷயம். உங்களது பந்து வீச்சாளர்களின் பார்ம்களை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு கேப்டனாக ரன்களை அடித்திருக்கலாம். ஆனால் எப்போதும் அணியில் உள்ள அனைவரையும் பற்றி கவலைப்படுவீர்கள். இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது. கேப்டனாக இல்லாததால் உங்கள் பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்த முடியும். இது மிகப்பெரிய நன்மையாகும்.
விராட் கோலி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து கொண்டாடுவார் என்று நம்புகிறேன். பல பேட்ஸ்மேன்கள் இதுவரை அதைச் செய்யவில்லை. நான் எனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் 48 ரன்களில் பேட்டிங் செய்தபோது ஸ்கொயர் லெக்கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தேன்” என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டபோது இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “தேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது உண்மையிலேயே ஒரு வீரருக்கு சிறப்பு வாய்ந்த சாதனையாகும். இது கோலியின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த சான்று. அவருக்கு இது இன்னொரு பெருமைப்படத்தக்க சாதனையாகும்.
விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக ஏராளமான பங்களிப்பை அளித்திருக்கிறார். வருங்காலத்தில் இன்னும் நிறைய பங்களிப்பார். அவருக்கு வாழ்த்துகள். அவருக்கு ஏதாவது பரிசு அளிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கிறீர்கள். இந்திய அணி வெற்றி பெற்றால் அதை விட அவருக்கு பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. அதே சமயம் ஒரு கிரிக்கெட் வீரராக தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் உட்பட பலர் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் தற்போது இந்தப் போட்டியை காண 50 சதவிகித ரசிகர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி 8,000 ரன்களை கடக்க உள்ளார். அந்த ரன்களை தொட அவருக்கு இன்னும் 38 ரன்கள் தேவை. இந்த ரன்களை அவர் இலங்கை டெஸ்ட் தொடரில் எடுப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்களில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் 8,000 ரன்னை கடந்துள்ளனர்.
8,000 ரன்னை கடக்கும் 6-வது இந்திய வீரர் என்ற சிறப்பை விராட் கோலி பெறவுள்ளார். கோலி இதுவரை 99 டெஸ்டில் விளையாடி 7,962 ரன் எடுத்துள்ளார். 27 சதம், 28 அரை சதம் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 254 ரன் குவித்தார். சராசரி 50.39 ஆகும்.
நாளை தொடங்கவிருக்கும் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டிக்கு கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share