சிரித்தும், அழுதும் நம்மை உற்சாகப்படுத்தும் சிறு குழந்தைகள் உள்ள வீடுகள் அனைத்தும் என்றும் ஆரவாரம் நிறைந்ததாய்க் காணப்படுகிறது.
காலை எழுந்தது முதலே அன்புக் குழந்தைகளைக் குளிப்பாட்டவும், உணவூட்டவும், விளையாடவும் பெற்றோர் தொடர் ஓட்டத்தில் தான் இருக்கிறார்கள். இதை எல்லாம் செய்வதில் அலாதி ஆனந்தம் அவர்களுக்குக் கிடைக்கத் தான் செய்கிறது. இருந்தாலும், உணவு உட்கொள்ள குழந்தைகள் மறுத்து அழும் போது என்ன செய்வதென்றே தெரியாமல் பலரும் வேதனையடைகின்றனர். கண்கவர் விளம்பரங்களையும், உணவுப் பொருட்களின் வெளித் தோற்றத்தையும் பார்த்து பல குழந்தைகளும் அவற்றை விரும்பி ஆரோக்கிய உணவை உண்ண வெறுப்பு காட்டுகின்றனர்.
அவ்வாறு அடம்பிடிக்கும் தனது குழந்தையை அரவணைத்து அவருக்கு உணவூட்டும் வழியை அம்மா ஒருவர் கண்டறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சிப்ஸ் பாக்கெட்டிற்குள் போட்டு குழந்தைக்கு அளித்து அவரை ஏமாற்றி சாப்பிட வைக்கிறார். சாக்லேட் கவருக்குள் ஆப்பிளை ஒளித்து வைத்து குழந்தைக்கு அளித்தும், பப்பாளி பழத்திலும், வாழைப்பழத்திலும் ஐஸ்க்ரீம் குச்சியை பொருத்தி வைத்து குழந்தையை நம்ப வைக்கிறார். இவ்வாறு குழந்தை விரும்பும் உணவுப் பொருட்களுக்கு பதிலாக மற்றொன்றை மாற்றி வைத்து அவருக்குத் தெரியாமலேயே குழந்தையை சாப்பிட வைத்துவிடுகிறார்.
இந்த வீடியோ நீண்டகாலமாக சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த அம்மாவின் அசத்தல் யோசனையை அனைவரும் பாராட்டி வருவதுடன், அதே வழிமுறையைப் பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கும் உணவூட்டி வருதாகக் கூறுகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”