வைரஸ் பரவல், நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் என்று நீண்ட காலமாக நாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலையில், விரும்பும் உணவு பொருட்களை வெளியே சென்று உட்கொள்ள முடியாமல் பலரும் கவலையில் இருக்கின்றனர்.
விருப்ப உணவின் புகைப்படத்தைப் பதிவிட்டு தங்கள் வருத்தத்தையும் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். கொரோனா பிரச்னை ஏற்பட்டு வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது ஏராளமான மக்கள் அவர்களின் நிலையை நினைத்து கவலை அடைந்தனர்.
அதே போன்று தங்கள் மனங்களை கொள்ளையடித்த வட நாட்டு உணவுப் பொருட்கள் மீண்டும் உட்கொள்ள இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அத்தகைய உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று பானி பூரி. குறைந்த விலையில் நிறைந்த சுவையைத் தரும் பானி பூரிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால் பானி பூரி தயாரிப்பு முறை மற்றும் பரிமாறும் விதம் குறித்து பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நிலவி வந்தன. சுகாதாரமற்ற முறையில் இவை தயாரிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வீடியோ ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வந்தன.
இருப்பினும் அதன் சுவையால் கவரப்பட்ட மக்களுக்கு அதை விட்டுக் கொடுக்க சற்றும் மனம் வரவில்லை. எனினும் உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டுமே என்ற அச்சமும் நிலவி வந்தது.
இத்தகைய குழப்பங்களுக்குத் தீர்வு தரும் விதமாக இளைஞர் ஒருவர் தானியங்கி பானி பூரி இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார். ஏடிஎம் இயந்திரம் போன்ற வடிவில் உள்ள இந்த உபகரணத்தில் எந்த வகையில் எத்தனை பானி பூரி வேண்டும் என்பதை பதிவிட வேண்டும். திரையில் தோன்றும் விவரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர் பணத்தை செலுத்தினால் தானாகவே நாம் கேட்ட பானி பூரியை இயந்திரம் நமக்குத் தந்து விடும்.
இது குறித்த வீடியோ யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் பலவற்றிலும் பகிரப்பட்டு வருகிறது. இனி மேல் சுகாதாரம் குறித்த அச்சம் இல்லாமல் பானி பூரி சுவைக்கலாம் என்று பலரும் அந்தப் பதிவுகளின் கீழே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”