அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள ‘விநோதய சித்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், நடிகர் சமுத்திரக்கனி, நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பேசுகையில், “இந்தப் படத்தில் நடித்த பிறகு உளவியல் ரீதியாக எனக்குள் மாறுதல் ஏற்பட்டு விட்டது. இனி பேச்சை குறைக்க முடிவு செய்து விட்டேன்.
18 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலசந்தருடன் நாடகம் ஒன்று பார்த்தேன். அதிலிருந்து உருவானதுதான் இந்த ‘விநோதய சித்தம்‘. நான் இயக்கிய, நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பான பதிவு என மனதார செல்கிறேன்” என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசும்போது, “இந்தப் படத்தின் 80 சதவிகிதக் கதை என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் போல அமைந்துள்ளது.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எனது அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டது. அப்போதே அப்பாவுக்கு விருப்பமானவரை தான் திருமணம் செய்து கொள்வதாக எனது தங்கை சொன்னார். அது போன்றே இந்தப் படத்தின் கதையும் இருந்தது.
என் தம்பி ஒன்பது ஆண்டுகளாக ஒரு பெண்ணை விரும்பினான். என் தந்தை சாதி பிரச்சினையால் தம்பியின் காதலை ஏற்கவில்லை. திருமணம் செய்தால் அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்து அப்பாவைச் சம்மதிக்க வைத்து அதே பெண்ணை திருமணம் செய்தான். இதுவும் இந்தப் படத்தின் கதையில் இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசும்போது, “நான் சினிமாக்காரனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். கலையின் தலைமகனாக இருப்பது சினிமா. கவலையில் ‘வ’ வை எடுத்து விட்டால் ‘கலை’ என்று வரும்.
சிறிய வயதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெண் பிள்ளைகளின் விரலைப் பிடித்து நடிக்க வேண்டும் என்பதால், என் ஆத்தாள் என்னை நடிக்க அனுமதிக்கவில்லை. அப்போதே நடித்திருந்தால் சூப்பர் ஸ்டார்கூட ஆகியிருப்பேன்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சினிமா எனக்கு அறிமுகமாகிவிட்டது. திரைப்படங்களுக்கு 13, 14 வயதிலேயே புகைப்படக்காரனாக இருந்தேன். வஞ்சிக்கோட்டை வாலிபன் பட விநியோகஸ்தர் எனது அப்பாதான்.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லாமல் உள்ளூரிலே இந்தப் படத்தை குறைந்த செலவில் எடுத்துக் கொடுத்துவிட்டார் சமுத்திரக்கனி. சினிமா என்பது புலி வாலை பிடித்த மாதிரி. என் மனைவிதான் எனக்கு வழிகாட்டி. இந்தத் தொழிலில் நான் முன்னேற காரணம் என் மனைவிதான்.
கே.பாலசந்தர், பாரதிராஜாவை சமுத்திரக்கனி வடிவில் பார்க்கிறேன். தேசிய விருதையும், ஆஸ்கரையும் கூட இந்தப் படம் பெறக்கூடும். Zee-5, சேனல் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
எங்கள் பரம்பரையில் வந்த கண்ணதாசன் பாடிய, கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… அதை யாருக்காகக் கொடுத்தான், ஊருக்காகக் கொடுத்தான் என்பதை உணர்ந்து செயல்படுகிறேன்” என்று கூறினார்.
‘விநோதய சித்தம்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று (அக்டோபர் 13) வெளியாக உள்ளது.
**-இராமானுஜம்**
�,