பெரிய பட்ஜெட் படங்களின் லக்கி நாளாக எதிர்நோக்குவது செப்டம்பர் 10ஆம் தேதிதான். விநாயகர் சதுர்த்தி தின பண்டிகை சிறப்பாக எக்கச்சக்கப் படங்கள் வெளியாக இருக்கின்றன. அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வருகிற செப்டம்பர் 10 ரிலீஸாக இருக்கும் படங்களின் லிஸ்ட் இது. இந்தப் பட்டியலில் இன்னும் சில படங்கள்கூட இணையலாம்.
**டிக்கிலோனா**
கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இது ஜீ5 தளத்தில் வெளியாகிறது. டிக்கிலோனா படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா மற்றும் ஷிரின் நடித்துள்ளனர். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், ஷாரா உள்ளிட்ட பலர் காமெடியன்களாக படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
**துக்ளக் தர்பார்**
புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான ரோலில் பார்த்திபன் நடித்திருக்கிறார். படமானது அரசியல் கதைக்களம் கொண்டது. இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் சன் டிவியில் நேரடியாக ப்ரீமியர் ஆகிறது.
**மின்னல் முரளி – நெட்ஃப்ளிக்ஸ்**
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கைவசம் க்ரூப், மின்னல் முரளி, கானேகானே, வழக்கு, நாரடன், வாஷி, வரவு, 2043ஃபிட் என பல படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இவரின் நடிப்பில் உருவாகவிருக்கும் சூப்பர் ஹீரோ படம் ‘மின்னல் முரளி’ டோவினோ தாமஸின் ‘கோதா’ படத்தை இயக்கிய ஃபாசில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம், செப்டம்பர் 10ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
**டக் ஜகதீஷ்**
டோலிவுட் சினிமாவில் கொரோனாவால் தள்ளிப்போன பெரிய ஹீரோக்களின் படங்களில் நானி படமும் ஒன்று. நானி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகியிருக்கும் படம் ‘டக் ஜகதீஷ்’. இந்தப் படம் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகவில்லை. தற்போது, இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுகிறார்கள். நானியின் முந்தைய படமான ‘வி’ படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. நம்ம ஊரில் சூர்யா எப்படியோ, அப்படி தெலுங்கில் நானியின் படங்களை விரும்புகிறது பிரைம் வீடியோ. இந்த நிலையில், டக் ஜகதீஷ் படமும் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.
**லவ் ஸ்டோரி**
சேகர் கம்மூலா தெலுங்கில் இயக்கிய ஃபிதா படம் மிகப்பெரிய ஹிட். அதன்பிறகு, மூன்று வருடங்கள் கழித்து அவரின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் ‘லவ் ஸ்டோரி’. நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதலில், இந்தப் படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸுக்குத் திட்டமிட்டார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகவில்லை. இந்த நிலையில், செப்டம்பர் 10க்கு நேரடியாக திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு தமிழிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏன் தெரியுமா? இந்தப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா தான், தனுஷ் நடிக்க இருக்கும் தெலுங்கு மற்றும் தமிழ் பைலிங்குவல் படத்தை இயக்க இருக்கிறார்.
**- ஆதினி **
�,