]விவசாயி தயாரிப்பில் விக்ரம் பிரபு

Published On:

| By Balaji

டாணாக்காரன், பொன்னியின் செல்வன் மற்றும் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் விக்ரம்பிரபு தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படமான பகையே காத்திரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்கும் இப்படம், இதுவரையில் விக்ரம்பிரபு நடித்த படங்களிலிருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்க்ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகப்படமாகவும் உருவாகிறது என்கிறார் இயக்குநர்

இப்படத்தில், கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார், சிவா ஷாரா, பாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு எஸ்.செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். கலை இயக்குநராக எம்.சிவா யாதவ், படத்தொகுப்பு ராஜா முகமது, சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்க உள்ளார். இப்படத்தைக் கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராசி முத்துசாமி தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்கவிழா நேற்று காட்டுப்பாக்கத்தில் உள்ள படப்பிடிப்பு பங்களாவில் நடைபெற்றது. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை தொடர்ந்து நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ராசி முத்துசாமி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி. விவசாயத்தோடு கேபிள் டிவி தொழிலும் செய்து கொண்டிருந்த அவருக்கு திரைப்படங்கள் மீது தீராக்காதல். அதனால், திரைப்படம் தயாரிக்க முன்வந்திருக்கிறார். தொடக்கத்தில் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்தாலும் சுமார் மூன்றாண்டுகள் முயற்சிக்குப் பின் இந்தப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்.

எங்கள் நிறுவனத்தின் பெயர் கந்தன் ஆர்ட்ஸ், எங்கள் பட இயக்குநரின் பெயர் மணிவேல், ஒளிப்பதிவாளர் செல்வகுமார் என்று அமைந்திருப்பதால் முருகன் அருள் பூரணமாக இருப்பதாக உணர்கிறேன்.

எங்கள் முதல் படமே கலைத்தாயின் தலைமகனான நடிகர்திலகம் அவர்களின் வழித்தோன்றலை வைத்து எடுப்பது எங்கள் பாக்கியம். இப்படம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அனைவரும் வியந்து பாராட்டுவீர்கள் என்று நம்பிக்கையும் பெருமிதமுமாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் ராசி முத்துசாமி.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share