வானம் கொட்டட்டும் படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின், விக்ரம் பிரபு நடிப்பில் இந்த வருடம் வெளியாகும் இரண்டாவது படம், அசுரகுரு.
கொரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்க்கும் சக்தி (விக்ரம் பிரபு), தடயமே இல்லாமல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் கில்லாடி. அரசாங்கத்தின் பணம், ஹவாலா பணம், வங்கிப் பணம் ஆகிய மூன்று முக்கியமான இடங்களிலும் கைவைக்கும் கதாநாயகனைக் காவல்துறை, தனியார் துப்பறிவாளர் தியா (மஹிமா நம்பியார்), ஹவாலா தொழில் செய்யும் தாதா ஆகியோர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏன் சக்தி இவ்வளவு பெரிய தொகையைக் கொள்ளையடிக்க வேண்டும், கொள்ளையடித்த பணத்தை வைத்து அவன் செய்தான் என்பதே அசுரகுரு படத்தின் மீதிக்கதை.
க்ரைம் ஜானரின் ஒரு வகையாகக் கருதப்படும் heist ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது. கடந்த 2016ஆம் ஆண்டில், சென்னை டு சேலம் இடையே நடந்த ரயில் கொள்ளையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அந்தச் சம்பவத்தைப் போலவே, கதாநாயகன் ரயிலில் இருக்கும் பணத்தைக் கொள்ளையிடுகிறார். ஆகா, ஏதோ விஷயமிருக்கு என ஓப்பனிங் சீனிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி விடுகிறது.
இரண்டு விஷயங்களில் அசுரகுரு ஏமாற்றத்தை அளிக்கிறது. 1. பொதுவாக heist ஜானரில், மிகவும் திறமையான ஒரு குழு இருக்கும். அந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உறவு, அவர்கள் போடும் சுவாரஸ்யமான திட்டம், கொள்ளையடிக்கும் இடத்தில் கண்டிப்பாக மாட்டிவிடுவார்கள் என நினைக்கும்போது நடக்கும் ஆச்சரியம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஜானர் இது. அசுரகுருவில் குழுவுக்குப் பதிலாக ஒரே ஒரு நாயகன்தான்; அவரது திட்டமும் நமக்குப் புரியாது; புரிந்தாலும் சுவாரஸ்யமிருக்காது; ஏதோ அவரது நண்பர் வீட்டில் மறந்து வைத்துவிட்ட பை போல, கொள்ளையடிக்கும் இடத்திலிருந்து பணத்தை எடுத்து விட்டு வருவார். 2. எதற்காக கொள்ளையடிக்கிறார்? கொள்ளையடித்த பணத்தை வைத்து என்ன செய்வார்? இந்த இரண்டு அடிப்படைக் கேள்விகள்தான் இந்த ஜானரில் உருவாகும் படத்தின் சாதக பாதகங்களைத் தீர்மானிக்கும். அசுரகுருவில் இதற்கான பதில்கள் இருந்தும் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
படத்தில் திரைக்கதை என்ற அம்சம் இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. கதையைத் திரைக்கதையாக எழுதுவதன் நோக்கமே அதைத் திரைக்கான மொழியில் கடத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், வெறும் வசனங்களாலேயே அனைத்தையும் சொல்லிவிட்டு நகர்கிறார் இயக்குநர். படத்தின் மையக் காட்சிகளை நம்பத்தகுந்த வகையில் காட்சிப்படுத்தாததும், அளவுக்கு மீறிய ஆக்ஷன் காட்சிகளாலும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
விக்ரம் பிரபு பரபரப்பாக ஓடுகிறார், ஆக்ஷன் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடுகிறார். ஆனாலும் நடிக்க வேண்டிய காட்சிகளில் மட்டும் அமைதியாகவே இருக்கிறார்.
மிக இயல்பான வசனங்களைக்கூட ஏன் அவ்வளவு தூரம் சிரமப்பட்டுப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. மஹிமா நம்பியாரைத் துப்பறியும் நிபுணராக ஒரு துளிகூட நம்ப முடியவில்லை. கொள்ளையடித்தவனைப் பிடிக்க சொன்னால், ‘அவன் பயங்கர பிரில்லியண்ட்’ என்கிறார். அடப் புடிம்மா என தியேட்டரே கத்தினாலும், காதலுடனே நாயகனைப் பார்க்கிறார். சைக்கோவில் வரும் அருந்ததி ராய் போல, ‘நீ திருடன் இல்ல… நோயாளி தான். நீ மட்டும் திருடனா மாறாம இருந்திருந்தா, உன் திறமைக்கு இந்நேரம்’… முடியல. இதில் ‘ஹாலிவுட்டில் வரும் ஸ்பைடர் மேன் போல, ஏமாற்றாத இன்ட்ரெஸ்டிங்கான ஹீரோ நீ’ என வசனங்கள் வேறு. ஒரு துப்பறியும் ராணியாக அறிமுகமாகும் மஹிமா, பின்னர் நாயகனை குணப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார். இன்னும் எத்தனை காலம்தான் தமிழ் சினிமாவில் நாயகிகள் ‘ஹீலிங் சென்டர்’ போலவே நாயகனுக்கு உதவுவார்கள் எனத் தெரியவில்லை. யோகி பாபு இருக்கிறார், நகைச்சுவை இல்லை. விக்ரம் பிரபுவின் நண்பராக வரும் ஜகன், தன் பாத்திரத்தை உணர்ந்து பங்காற்றியிருக்கிறார். ஒரு நடிகராகப் படத்தில் தேறுவது இவர் மட்டுமே.
அசுரகுரு – நாயகன் கொள்ளையடித்தது பணத்தை அல்ல, நம் நேரத்தை.
**ஜேஎஸ்பி சதீஷ் தயாரிப்பில் ராஜ் தீப் இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபு, ஜெகன், மஹிமா நம்பியார், சுப்பாராஜு, குமாரவேல், யோகி பாபு நடித்திருக்கின்றனர். இசை: கணேஷ் ராகவேந்திரா; ஒளிப்பதிவு: ராமலிங்கம்; படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்.**
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,”