ஒரு கேரக்டருக்கான உடையை அணிந்ததிலிருந்து அந்த கேரக்டராக மாறுபவர்களும், அந்த கேரக்டரையே தன் உடையாக அணிந்துகொள்பவர்களையும் கலைஞனாக அங்கீகரிக்கின்றனர் ரசிகர்கள். அந்த அங்கீகாரத்தை கைதட்டலின் மூலம் பெறுவதற்காக கால் நூற்றாண்டாக பல விதமான உடைகளை அணிந்துகொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். இது போதாதென்று கோப்ரா திரைப்படத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடிக்கும் அசாத்திய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
அந்நியன் திரைப்படத்தில் மூன்று கேரக்டர்களில் நடித்தது, கந்தசாமி திரைப்படத்தில் வெவ்வேறு விதமான மாறுவேஷத்தில் வந்தது என விக்ரம் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தசாவதாரத்தில் பத்து கேரக்டர்களில் நடித்து மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக்கொண்டார் கமல். ஆனாலும், விக்ரம் முயற்சியை கைவிடவில்லை. ஐ திரைப்படத்தில் மீண்டும் மூன்று விதமான தோற்றத்தில் நடித்து தனது ஆகிருதியை நிரூபித்தார். இப்போது கமலை ஓவர்டேக் செய்யும் முயற்சியாகவே இருபது விதமான கேரக்டர்களில் கோப்ரா படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம் என்கின்றனர் படக்குழுவினர்.
டிமாண்டி காலனி , இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் நடிக்கும் பலவிதமான கேரக்டர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு பாம்பு தனது தோலை உறித்து புதுப்பித்துக்கொண்டே இருப்பது போல, விக்ரமும் பலவிதமான கேரக்டர்களுக்கு தனது உடலை மாற்றிக்கொண்டே இருப்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. கோப்ரா படத்தில் விக்ரம் ஒரு சயிண்டிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தெரிகிறது.
**-சிவா**�,