bமாஸ்டர் படம் நிகழ்த்திய புதிய சாதனை!

Published On:

| By Balaji

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜனவரி 13ஆம் தேதி வெளியானது ‘மாஸ்டர்’. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது.

விஜய்யை தாண்டி படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் வில்லனாகக் கெத்து காட்டியிருந்தார். நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். விஜய் கல்லூரி தோழியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். இவர் க்ளைமேக்ஸில் ஆக்‌ஷன் சீக்குவன்ஸில் வந்து மிரட்டியிருப்பார். கல்லூரி மாணவர்களாக சாந்தனு, கெளரி கிஷண் நடித்திருந்தனர். குட்டி வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியானது. அதோடு, பான் இந்தியா அளவில் மாஸ்டர் வெளியானது. தமிழில் 50% இருக்கை மட்டுமே நிரப்ப வேண்டும் என்கிற சூழலில் வெளியாகியும்கூட படம் வசூலில் சிக்ஸர் விளாசியது.

எந்த அளவுக்கென்றால், இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி 2. இந்தப் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாகவே டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, ஒரு படத்தின் வசூல் தயாரிப்பாளரைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தயாரிப்பாளர் லலித்குமாரின் நெருங்கிய வட்டாரத்தின் தகவல்படி, தமிழகத்தின் அதிக வசூல் சாதனைப் பெற்ற பாகுபலி 2 படத்தை முறியடித்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறதாம் மாஸ்டர்.

மாஸ்டர் வெளியான போது 50% இருக்கைக்கு அனுமதி என்றாலும், 100% இருக்கையுடன்தான் பல திரையரங்குகள் படத்தைத் திரையிட்டன. அதோடு, முதல் மூன்று நாட்களில் ரூ.5,000 வரை மாஸ்டர் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அப்படிப் பார்க்கையில், கணக்கில் வராத இந்த வசூல் தொகையையும் சேர்த்தால், மாஸ்டர் வசூல் இன்னும் அதிகம்தான் என்பது நினைவுக்கூரத்தக்கது.

தமிழகத்தின் டாப் 5 வசூல் சாதனைப் படங்கள் என பட்டியல் எடுத்தால், மாஸ்டர், பாகுபலி 2, பிகில், சர்க்கார் மற்றும் மெர்சல் படங்களே இடம்பிடித்துள்ளன. இதில் நான்கு படங்களுமே விஜய் படங்களாக இருப்பதால், விஜய்யின் அடுத்தடுத்த படங்களின் மதிப்பும், விஜய் சம்பளமும் உயர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக, விஜய்க்கு நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘விஜய் 65’ படம் உருவாக இருக்கிறது. அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படமானது ஏப்ரலில் ரஷ்யாவில் படப்பிடிப்பு தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது.

**- தீரன் **

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share