விஜய் 65 ரிலீஸ் திட்டம் : ரஜினிக்காக தள்ளிப் போகும் விஜய்

Published On:

| By Balaji

அனுபவமிக்க மூத்த இயக்குநர்களுடன் பணியாற்றுவது போலவே, அவ்வப்போது இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பார் நடிகர் விஜய். அப்படி, மாநகரம், கைதி என இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவானது மாஸ்டர். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனைப் படைத்துவருகிறது.

மீண்டும் இளம் இயக்குநருக்கே விஜய் 65 பட வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் விஜய். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தப் படம் உருவாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 2020ல் வெளியானது.

விஜய் 65 படத்தை இந்த வருட தீபாவளிக்கே வெளியிடலாம் என திட்டமிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால், தற்பொழுது, ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளது. இரண்டு படங்களுமே சன்பிக்சர்ஸ் தான் தயாரித்துவருகிறது என்பதால் ஒரே நாளில் இரண்டு படங்களை நிச்சயம் வெளியிட மாட்டார்கள்.

ஏன் திடீர் மாற்றம் என விசாரித்தால், அண்ணாத்த சென்ற வருடமே துவங்கிவிட்டது. படம் முடிந்து ரிலீஸாகாமல் கையிலேயே இருந்தால் செலவு அதிகரித்துக் கொண்டே போகும். அதுமட்டுமல்லாது, இன்னும் 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறத்து. ரஜினியுடன் கலந்துபேசி படப்பிடிப்பை துவங்கவும் தயாராகிவருகிறதாம் படக்குழு. அதனால், ரஜினிக்காக விஜய் படம் தள்ளிப்போகிறது.

அதோடு, பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பண்டிகையை குறிவைத்தே வெளியாகும். இந்த தீபாவளிக்கு மற்ற ஹீரோக்களின் படம் வெளியாவதாக அறிவிப்பு வருவதற்கு முன்பாக, அட்வான்ஸாக துண்டு போட்டுவிடவே தீபாவளி ரிலீஸை முன்கூட்டியே அறிவித்துவிட்டது சன்பிக்சர்ஸ். ரஜினி படமே வெளியாவதால் மற்ற ஹீரோக்களின் படங்கள் பின்வாங்கும். இந்தக் காரணத்துக்காக தான், முடியாத படத்துக்கு முதல் ஆளாக அறிவிப்பு விட்டிருக்கிறார்கள்.

ஆக, ரஜினி படம் தீபாவளிக்கு வருவதால், மாஸ்டர் ரிலீஸ் போல விஜய்யின் அடுத்தப் படமான விஜய் 65 படமும் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share