நடிகர் சந்தானத்துக்கு சென்ற வருட லாக்டவுனுக்கு முன்பு டகால்டி படமும், லாக்டவுனுக்குப் பிறகு பிஸ்கோத் படமும் வெளியானது. இரண்டுமே பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்த வருட ஓபனிங்காக A1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்து ‘பாரிஸ் ஜெயராஜ்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், சந்தானம் நடிப்பில் சபாபதி, டிக்கிலோனா படங்கள் ஓடிடி ரிலீஸூக்காகத் தயாராகிவந்தது. இதில், டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதியாகியிருக்கிறது.
முன்பெல்லாம் கோலிவுட்டில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். ஹீரோவானப் பிறகு, ஒரு படத்தை ரிலீஸ் செய்வதே மிகப்பெரிய சவாலாகிவிட்டது. இவர் நடிப்பில் மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் படங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் ரிலீஸாகாமல் இருக்கிறது.
இதில், சபாபதி படம் சோனி லிவ் தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படம் ஜீ5 தளத்தில் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.
டிக்கிலோனா படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா மற்றும் ஷிரின் நடித்துள்ளனர். யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், ஷாரா உள்ளிட்ட பலர் காமெடியன்களாக படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
சந்தானம் படத்தோடு விஜய்சேதுபதி படமும் செப்டம்பர் 10ஆம் தேதி போட்டியாக வெளியாக இருக்கிறது. புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய்சேதுபதிக்கு இணையான ரோலில் பார்த்திபன் நடித்திருக்கிறார். படமானது அரசியல் கதைக்களம் கொண்டது. இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிக்கிலோனா ஓடிடியில் வெளியாவது போல, நேரடியாக டிவியில் துக்ளக் தர்பார் ஒளிபரப்பாக வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். விஜய்சேதுபதியும், சந்தானமும் இணைந்து படம் நடித்ததில்லை. முதன்முறையாக, இருவரின் படங்களும் ஒரே நாளில் மோதிக் கொள்ள இருக்கிறது. எந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கப் போகிறதென்பதைப் பொருத்திருந்துப் பார்க்கலாம்.
**- ஆதினி **
�,