‘கடைசி விவசாயி’ படத்திற்கு முதலில் விஜய் சேதுபதி வேண்டாம் என்றேன் என அந்த படத்தின் இயக்குநர் மணிகண்டன் கூறியுள்ளார்.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நல்லாண்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘கடைசி விவசாயி’, விவசாயத்தையும் அந்த மனிதர்களின் பிரச்சனைகளையும் அடிப்படையாக கொண்ட கதை இது. இந்த மாதம் 11ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் இந்த படம் குறித்தான சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் மணிகண்டன் பேசியதாவது, ”இந்த படத்தில் ராமையா எனும் சிறு கதாப்பாத்திரத்தில்தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார். முதலில் இந்த கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க தயங்கினேன். அவரை வேண்டாம் என மறுத்தேன். ஏனெனில் கதைப்படி விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் காடு மலை வெயில் என கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும்.
அதுவும் இல்லாமல் அவருடைய உடைகளும் கனமானதாக இருக்கும். எனவே, அவரை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என நினைத்தேன். இந்த ஒரு காரணத்தினாலேயே அவரை இந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்க தயங்கினேன். மற்றபடி வேறெந்த காரணமும் கிடையாது.
ஆனால், விஜய் சேதுபதிக்கு இந்த கதையும் கதாப்பாத்திரமும் மிகவும் பிடித்திருந்ததால் அவர் ‘நான்தான் நடிப்பேன்’ என கதையில் தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டார்.
அவர் உள்ளே வந்ததும் படம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
‘காக்கா முட்டை’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே ‘குற்றமே தண்டனை’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**