இந்தியாவில் இதுவரை ஒளிபரப்பான வெப் தொடர்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது தி பேமிலி மேன் 2. இதன் முதல் பாகமும் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஜெயவந்த் காசிநாத், திருத்தி திவாரி, சாஜித கஹானி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இது இந்தியாவுக்கு எதிராக திட்டமிடும் காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய கதை.
சமீபத்தில் வெளியான இரண்டாவது சீசன் கதையில் இந்தியாவில் ஒரு வெடிகுண்டு திட்டத்தை செயல்படுத்த இலங்கை தீவிரவாத குழு ஒன்றும், பாகிஸ்தான் உளவு பிரிவும் திட்டமிடுவதான கதை. இந்தத் தொடரின் பெரும்பகுதி கதை சென்னையில் நடப்பதால், இதன் படப்பிடிப்புகளும் சென்னையில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகேவும், நடிகர் மனோஜ் பாஜ்பாயும் விஜய் சேதுபதியைச் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
இரண்டாவது வெப் தொடர் பற்றிய புரமோசன்களில் பேசி வரும் மனோஜ் பாஜ்பாய் சென்னையில் விஜய் சேதுபதியைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். நான் விஜய் சேதுபதியை சந்திக்க விரும்பியபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவு செய்தோம். சென்னையின் உண்மையான மனிதர்களைப் பார்க்க விரும்பினேன், அதற்கான சந்திப்புதான் இது என்று மனோஜ் பாஜ்பாய் இந்தச் சந்திப்பு பற்றி கூறியிருக்கிறார்.
இரண்டாவது தொடரில் சமந்தா இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத பெண்ணாக நடித்திருந்தார். இந்தத் தொடரில் இலங்கை போராளிக் குழு தலைவர் பாஸ்கரனாக நடிக்க விஜய் சேதுபதியைத்தான் முதலில் அணுகி இருக்கிறார்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகள், தேவையற்ற விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டதைக் கூறி இலங்கை சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அவருக்கு மாற்றாக அவர்தான் மைம்கோபியை சிபாரிசு செய்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தி பேமிலி மேன் வெப் தொடரின் மூன்றாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாவும், அதற்காக நடந்த சந்திப்புதான் இது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
**-இராமானுஜம்**
�,