நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதாக கடந்த நவம்பர் மாதம் ஊடகங்களில் செய்திகள் பரபரத்தன. அப்படியே கொஞ்ச நேரத்தில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் கட்சி துவங்கியிருப்பதாக செய்திகள் உறுதியாகின. விஜய் பெயரில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ எனும் கட்சியைத் துவங்கியதாக தகவல்கள் வெளியாகி வைரலானது.
விஜய் பெயரில் துவங்கிய கட்சிக்குத் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் இருந்தது. ஆனால், இப்படியான ஒரு கட்சி ஆரம்பித்ததே விஜய்க்குத் தெரியவில்லை. உடனடியாக விஜய் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், ‘என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவா்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.’ என்று கூறியிருந்தார். அதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சிப் பதிவை வாபஸ் பெற்றார். அத்தோடு, விஜய் கட்சி துவங்குவது குறித்த செய்தி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஒரு கட்சி துவங்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி. இதற்காக விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அதன்படி, எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி அல்லது அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம் எனும் பெயரில் புதிய கட்சி துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தை பிறந்ததும் வழி பிறக்கும், கட்சியும் உருவாகும் என ஆலோசனையில் முடிவும் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் விஜய்யை சந்தித்ததாகவும், அவர் என்னை கட்டியணைத்து அன்பை பகிர்ந்தார். ஒரு மோதிரம் போட்டுவிட்டார் என்றெல்லாம் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருந்தார். இந்த தகவல் குறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கிடைத்தது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய் சென்னையிலேயே இல்லையாம். வெளியூரில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில், விஜய்யை எஸ்.ஏ.சி சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறானது. அதோடு, ஏற்கெனவே கட்சித் துவங்குவது குறித்து தெளிவாக அறிக்கையை வெளியிட்டு விளக்கியவர் விஜய். அப்படி இருக்கையில், மீண்டும் கட்சித் துவங்குவதை விஜய் விரும்பியிருக்கவே மாட்டார். அதோடு, தந்தையின் இந்த செயல்பாடுகளால் கடந்த ஆறுமாதமாக இருவருக்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருக்கிறதாம்.அதுமட்டுமல்ல, சில காலமாக தந்தையின் மொபைல் எண்ணை ப்ளாக் செய்து வைத்திருக்கிறார் விஜய் என்று சொல்லப்படுகிறது. ஆக, விஜய்யை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிறார் என்றே புரிகிறது.
**-ஆதினி**�,