பொங்கல், தீபாவளி என்றாலே குடும்பத்துடன் நடைபெறும் கொண்டாட்டங்களோடு திரைப்பட கொண்டாட்டமும் சேர்ந்துகொள்ளும். அதிலும் தீபாவளி முக்கியமானது. ஒரே நாளில் பலரும் திரைப்படங்களைப் பார்த்துவிட முயன்று டிக்கெட்டுக்கான டிமாண்டை அதிகரிப்பார்கள். அப்படிப்பட்ட தினங்களெல்லாம் மார்க்கெட் உள்ள நடிகர்களுக்குத்தான் இருக்கும்.
சென்ற வருடம் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி சிறப்பாக வெளியானது. ஆனால், 2020ஆம் ஆண்டு ஒரு டிஜிட்டல் வருடமாகவே சென்றுவிட்டதால், நயன்தாராவும் தற்போது டிஜிட்டல் தளம் நோக்கி நகர்ந்துவிட்டார் என்ற செய்தியை [மின்னம்பலத்தில்](https://www.minnambalam.com/entertainment/2020/10/07/15/mookuthi-amman-ott-release-nayanthara) குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பொதுவாகவே தமிழ் சேனல்களுக்கென்று ஒவ்வொரு திரைப்படம் டிரேட்மார்க்காக இருக்கும். அப்படி, நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படம் தான் விஜய் தொலைக்காட்சியின் டிரேட்மார்க்காக இருக்கிறது. இதன் காரணமாகவோ, அதிக பணம் கொடுத்ததன் காரணமாகவோ நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை விஜய் டிவி வாங்கி வெளியிடுகிறது. 2020ஆம் ஆண்டு முக்கியமான திரைப்படங்கள் எதுவும் ரிலீஸாகாததால், இந்த வருட தீபாவளி சிறப்பு திரைப்படமாக எதனை ஒளிபரப்புவார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் டிவி-யின் பதிலாக இதனைப் பார்க்கலாம்.
தீபாவளி அன்று விஜய் தொலைக்காட்சியிலும், OTT தளமான டிஸ்டி+ ஹாட்ஸ்டாரிலும் மூக்குத்தி அம்மன் ரிலீஸாகிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை இரு நிறுவனங்களும் பெரும் விலைக்கு வாங்கியிருக்கின்றன. தீபாவளிக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என்ற ஒரு நம்பிக்கை தியேட்டர் வட்டாரத்தில் இருக்கிறது. அப்படி மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாகும்போது, வீட்டில் உட்கார்ந்துகொண்டு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை மக்கள் பார்ப்பார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.
-முத்து-�,