பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகைகளைக் குறிவைத்தே அதிகமாக வெளியாகும். பண்டிகை நேரமென்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்பதையெல்லாம் தாண்டி, பண்டிகை நாட்களில் அதிக விடுமுறை நாட்கள் இருக்கும். அதிகமாக ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்கள்; அதிக வசூல் பார்த்துவிடலாம் என்பதே பண்டிகைகளில் படம் ரிலீஸாவதன் பின்னணியில் இருக்கும் சூட்சமம். குறிப்பாக, விஜய்க்கு நிறைய படங்கள் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, மாஸ்டர் இந்தப் பொங்கலுக்கு வெளியாவதால், 2001 முதல் 2021 வரை பொங்கலுக்கு வெளியான விஜய் படங்கள் என்னென்ன, விஜய் படத்துடன் மோதிய ஹீரோஸ் யார் என்பதை ஒரு சின்ன ரிவைண்டாக பார்த்துவிடலாம்.
**ப்ரண்ட்ஸ் (2001)**
விஜய், சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் ப்ரண்ட்ஸ். சித்திக் இயக்கத்தில் ஃபேமிலி டிராமாவாக வெளியாகி செம ஹிட். காண்ட்ராக்டர் நேசமணியாக வடிவேலுவின் காமெடிகள் அதகளப்படுத்தியிருக்கும். இந்தப் படத்துக்குப் போட்டியாக வெளியான மற்றுமொரு படம் அஜித் நடித்த தீனா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான தீனாவும் செம ஹிட். இந்தப் படத்திலிருந்துதான், அஜித்துக்கு தல பட்டம் கொடுக்கப்பட்டது. இரண்டு படமுமே ஈக்குவல் ஹிட்.
**வசீகரா (2003)**
செல்வ பாரதி இயக்கத்தில் விஜய், சினேகா நடிப்பில் வெளியான படம் வசீகரா. விஜய் – வடிவேலு காம்போ ப்ரண்ட்ஸ் படத்தில் செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். அதனால், அதே போன்ற காமெடி ட்ராக்குடன் காதல் படமாக வெளியானது. நினைத்தது போல வடிவேலு – விஜய் கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கும். ஆனால், படம் பெரிதாக செல்ஃப் எடுக்கவில்லை. விஜய்யின் வசீகராவுடன் கமல்ஹாசனின் அன்பே சிவம் படமும் வெளியானது. படம் புரியாமல் போக, தோல்வியைத் தழுவியது. இவ்விரு படங்களுக்கு நடுவே சைலண்டாக வந்து பெரிய ஹிட் கொடுத்தது விஜயகாந்த் நடித்து வெளியான சொக்கத்தங்கம். நம்பலைனாலும் அதான் நெசம்!
**திருப்பாச்சி (2005)**
காதல், காமெடி , ஃபேமிலி என பல ஜானர்களில் விஜய் படங்கள் அதிகமாக வந்துகொண்டிருந்த நேரம். கமர்ஷியல் மாஸ் ஹீரோவாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டிருந்த விஜய்க்கு சினிமா கேரியரில் முக்கிய படம் திருப்பாச்சி. பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் இந்தப் படம் வெளியானது. ஃபேமிலி கதையுடன் மாஸ் ஹீரோவாக விஜய்யை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது திருப்பாச்சி. இந்தப் படத்துடன் தனுஷின் தேவதையைக் கண்டேன் படமும், சரத்குமார் நடித்த ஐயா படமும் வெளியானது. நயன்தாரா அறிமுகமான படம். திருப்பாச்சி ஹிட் என்றாலும், வசூலில் அடித்து நொறுக்கியது சரத்குமாரும் நயன்தாராவும் தான். “அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை… கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..”
**ஆதி (2006)**
விஜய்க்கு சென்டிமென்ட் கலந்த மாஸ் ஹீரோயிஸம் ஒர்க் அவுட் ஆனதால், அடுத்தடுத்து அப்படியான படங்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். அப்படி ரமணா இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், விவேக் நடிப்பில் வெளியானது ஆதி. வித்யாசாகர் இசையில் பாடல்கள் மெலடி. ஆனால், படம் பெரிதாக ஓடவில்லை. விஜய்க்குப் போட்டியாக அஜித் நடித்த பரமசிவம் படம் களமிறங்கியது. பரமசிவம் கதையும் கொஞ்சம் சொதப்பிவிட அஜித், விஜய் என இரண்டு பேருக்குமே மோசமான பொங்கலாக இந்த வருடம் அமைந்தது என்பதே உண்மை.
**போக்கிரி (2007)**
சென்ற வருடம் பொங்கலை மிஸ் செய்துவிட்ட விஜய், இந்த முறை டபுள் ஆக்ஷனுடன் வந்தார். விஜய்க்கு தி பெஸ்ட் பொங்கல் என்றால் போக்கிரி பொங்கல்தான். விஜய், அசின் நடிப்பில் பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி அதகளப்படுத்தியது. ரவுடியாக சுற்றிவரும் ஹீரோ, திடீரென போலீஸாக மாறி ட்விஸ்ட் கொடுக்கும் இடங்களில் சில்லறையைச் சிதற விட்டார்கள் ரசிகர்கள். இந்தப் படத்தோடு அஜித்தின் ஆழ்வார் படமும் வெளியானது. இந்தப் பக்கம் அஜித்துக்கும் ஹீரோயின் அசின் தான். ஆனால், அசினின் ராசி விஜய்க்கு மட்டுமே ஒர்க் அவுட் ஆனது. ஆழ்வார் பெரிய ப்ளாப். ஒரு பக்கம் போக்கிரி பொங்கல் என்றால் இன்னொரு பக்கம் புது ஹீரோவாக வளர்ந்து வந்த விஷாலுக்கு தாமிரபரணி வெளியானது. இந்தப் படமும் வில்லேஜ் பகுதியில் பெரிய வெற்றியைத் தந்தது.
**வில்லு (2009)**
பிரபுதேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் வில்லு. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் செம ஹிட். வடிவேலு காமெடியும் செமையாக வந்திருக்கும். நம்பிக்கையோடு திரையரங்கம் சென்றால் பெரிய ஏமாற்றம். வில்லு உடையவில்லை, ரசிகர்கள் மனதை உடைத்துவிட்டது. வில்லு படத்துடன் போட்டியாக வெளியானது தனுஷின் படிக்காதவன். என்ன மாயமோ தெரியவில்லை, வில்லு கொடுத்த ஏமாற்றத்துக்கு ஆறுதலாக அமைந்தது தனுஷின் படிக்காதவன். ஆனால், இந்த வருடம் ரசிகர்களுக்கு பொங்கல் ஒழுங்காக அமையவில்லை.
**காவலன் (2011)**
விஜய், அசின் காம்போவில் வெளியான படம் காவலன். மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் ப்ரண்ட்ஸ் படத்துக்குப் பிறகு, மீண்டும் விஜய் நடித்த படம் இது. தொடர்ச்சியாக மாஸ் ஹீரோயிஸ படங்களில் நடித்துவந்த விஜய்க்கு பெரிய பிரேக் காவலன். புது லுக்கில் விஜய் இருப்பார். படமும் பெரிய ஹிட். என்ன சர்ப்ரைஸ் என்றால் காவலனுடன் மோதிய தனுஷின் ஆடுகளம், கார்த்தியின் சிறுத்தை என மூன்று படங்களுமே 2011 பொங்கலுக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் ஆடுகளம் ஒரு பக்கம் வெற்றி என்றால், காமெடி சரவெடியாக சிவா இயக்கத்தில் சிறுத்தை கார்த்திக்குப் பெரிய ஹிட்டானது. வெளியான எல்லா படங்களும் ஹிட் என ரசிகர்களுக்கு பெஸ்ட் பொங்கல் என்றால் இதுதான்.
**நண்பன் (2012)**
அமீர்கான் நடித்து வெளியான ‘த்ரீ இடியட்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் நண்பன். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியானது. படமும் பெரிய ஹிட். நண்பனோடு வெளியானது ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படமும் கமர்ஷியலாக நல்ல வசூல் சாதனையைப் படைத்தது.
**ஜில்லா (2014)**
போக்கிரி – ஆழ்வார் படத்துக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து விஜய் – அஜித் மோதிக்கொண்ட வரலாற்று சம்பவம் 2014ஆம் ஆண்டு நடந்தது . இந்த முறை விஜய்க்கு ஜில்லா வெளியானது. விஜய், மோகன்லால் நடிப்பில் நேசன் இயக்கத்தில் வெளியான ஜில்லா நல்ல ஹிட். அதுபோல, ஜில்லாவுக்கு எதிராக அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் வீரம். இரண்டு படங்களுமே கமர்ஷியலாக பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. சபாஷ், சரியான போட்டி எனச் சொல்லும் அளவுக்குப் போட்டிப் போட்டு ரசிகர்கள் கொண்டாடிய படங்கள் இவைகள் தாம்.
**பைரவா (2017)**
விஜய்க்கு கடைசியாக பொங்கல் ரிலீஸ் படமென்றால், 2017இல் வெளியான பைரவா. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பைரவா கமர்ஷியல் மசாலா படம் தான். ஆனால், கதை பெரிதாக கைகொடுக்கவில்லை. பெரிய தோல்விப் படமாகவே பைரவா அமைந்தது. பொங்கலுக்கு பைரவாவுடன் ரிலீஸான மற்றுமொரு படம் பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக. இந்தப் படமும் பெரிதாக சோபிக்கவில்லை. பைரவா பொங்கல் சுவைக்கவில்லை.
**மாஸ்டர் (2021)**
மீண்டும் பொங்கல் ரேஸில் வந்திருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது மாஸ்டர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிறது. விஜய்யுடன் முதன்முறையாக பொங்கல் ரேஸில் மோதுகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படமும் மாஸ்டருக்குப் போட்டியாக வெளியாகிறது. இரண்டு நடிகர்களில் யாருக்கு இந்தப் பொங்கல் சாதகமாக இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
**-ஆதினி**�,”